

தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகளை ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார்.
நடனமாடும் சிவன் சிலை மற்றும் அர்த்தனாரீஸ்வரர் சிலை ஆகியவைதான் அந்தச் சிலைகள். சுமார் 11 அல்லது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிற இந்தப் புராதனச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2008ம் ஆண்டு நியூயார்க்கில் பழம்பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளரான சுபாஷ் கபூர் என்பவர் நடனமாடும் சிவன் சிலையை ஆஸ்திரேலியாவில் கேன்பெர்ரா எனும் இடத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு 5 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.30 கோடி) விற்றார். அவரிடமிருந்த அர்த்தனாரீஸ்வரர் சிலை சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து களவாடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்துக்குரிய இந்தச் சிலைகளைத் திரும்ப தன்னிடம் ஒப்படைக்க இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவை இந்தியா வலியுறுத்தியது.
அதை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியப் பிரதமர் தன் இரண்டு நாள் இந்தியப் பயணத்தின்போது அவற்றைக் கொண்டு வந்திருந்தார். 'இது ஆஸ்திரேலியாவின் நல்லெண்ணத்துக்குச் சான்று' என்று டோனி அபோட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலைப் பொருட்களைக் களவாடிய குற்றத்துக்காகத் தற்போது சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர் தன்னிடம் இந்தச் சிலைகளைத் தூதரக அதிகாரி ஒருவரின் மனைவி விற்றார் என்று கூறியதாக ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.