Last Updated : 13 Apr, 2019 02:35 PM

 

Published : 13 Apr 2019 02:35 PM
Last Updated : 13 Apr 2019 02:35 PM

தீ விபத்தில் 30 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரைவிட்ட நாய்

உத்தரப்பிரதேசம், பண்டா நகரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது அனைவரையும்  காப்பாற்றிய நாய், இறுதியில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தது.

உத்தரப்பிரதேசம் பண்டா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கீழ் தளத்தில் நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலையும், இரு மாடிகளிலும் உள்ள குடியிருப்பில் மக்களும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் குடியிருப்புவாசிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, கீழ்தளத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலையில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு மெல்ல  தீ பரவியுள்ளது.

அப்போது குடியிருப்புவாசிகள் வளர்க்கும் நாய்  தொழிற்சாலை அருகே வாயில் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது. தீவிபத்து ஏற்பட்டதைப் பார்த்ததும் நாய் தொடர்ந்து சத்தமாக குரைக்கத் தொடங்கியுள்ளது. நாயின் குரைப்புச் சத்தம் தொடர்ந்து அதிகரிக்கவே குடியிருப்பு வாசிகளில் ஒருவர் வீட்டின் கதவைத் திறந்து பார்க்துள்ளார். அப்போது, தீ மள மளவென கீழ்தளத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த குடியிருப்புவாசிகள் அனைவரும், வீட்டில் இருந்து தப்பி ஓடி உயிர்பிழைத்தனர். ஆனால், தங்கள் உயிரைக் காப்பாற்றிய நாயை அந்த குடியிருப்பு வாசிகள் காப்பாற்றுவதற்குள் தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் தொழிற்சாலையின் அருகே கட்டப்பட்டு இருந்த நாய் இடிபாடுகளுடன் சிக்கி உயிரிழந்தது.

இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், " இரவில் நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தது. இதைப் பார்த்து நான் வீட்டின் கதவை திறந்துபார்த்தபோது தீவிபத்து ஏற்பட்டு இருப்பதை அறிந்தேன். தீ விபத்தை உணர்த்துவதற்காகத்தான் நாய் குரைத்துள்ளது என்பதை அறிந்து அனைத்து குடியிருப்பு வாசிகளையும் கீழே இறங்கக்கூறினேன். நாயின் குரைப்புச் சத்தத்தால் 30 பேர் உயிர் பிழைத்தார்கள். ஆனால், நாங்கள் நாயைக் காப்பாற்றுவதற்குள், சிலிண்டர் வெடித்ததில் சிக்கி உயிரிழந்துவிட்டது வேதனை அளிக்கிறது " எனத் தெரிவித்தனர்.

இது குறித்து தீ தடுப்பு அதிகாரி வினய் குமார் கூறுகையில், " நாற்காலிகள் செய்யும் தொழிற்சாலையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு சிலிண்டரும் வைக்கப்பட்டு இருந்ததால், சிலிண்டர் வெடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால், யாரும் குடியிருப்பு பகுதியில் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்க்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x