Last Updated : 20 Apr, 2019 04:44 PM

 

Published : 20 Apr 2019 04:44 PM
Last Updated : 20 Apr 2019 04:44 PM

தேர்தல் கணிப்பு: வயநாடு வாக்காளர்களைக் கவர்ந்த ராகுல் காந்தி; வெற்றிக்கு அதிக வாய்ப்பு

வயநாடு வாக்காளர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் தென்மாநிலத்திலிருந்து முதன்முறையாகப் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக, பாரத் தர்ம ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட ராகுல் இந்த முறை கேரளாவின் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்.

தென்மாநிலம் ஒன்றிலிருந்து ராகுல் போட்டியிடுவது இதுவே முதன்முறை.

கேரளாவில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் கேரளாவில் பரபரப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்திக்கு வயநாடு தொகுதியில் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வயநாட்டைச் சேர்ந்த சில வாக்காளர்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதாவது:

குஞ்சிகிருஷ்ணா குருப் (86): நான் எனது வாக்கை ராகுல்காந்திக்கே அளிப்பேன். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தைத் தர முடியும் என நம்புகிறேன்.

இவரைப் போலவே பலரும் இதே கருத்தைத் தெரிவித்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் வயநாட்டு மக்களின் நீண்ட கால தேவையான மருத்துவக் கல்லூரி, ரயில் பாதைகள், மேம்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து ஆகியன சாத்தியமாகும் என இத்தொகுதி மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் தொகுதி முழுக்க ராகுலுக்கு மட்டும்தான் ஆதரவு இருக்கிறது என்றும் சொல்லிவிடமுடியாது.

சுரேந்திரன் என்பவர் கூறும்போது, பினராயில் விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி கேரள வெள்ளத்தையும், நிபா வைரஸ் தொற்றையும் சிறப்பாக கையாண்டது. அதனால் அவர்களுக்குத்தான் தனது வாக்கு எனத் தெரிவித்தார்.

இன்னும் சிலர், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் வயநாட்டை கண்டுகொள்வதில்லை. வயநாடு - கர்நாடகா இடையே ரயில் போக்குவரத்து, மருத்துவக் கல்லூரி போன்ற கனவுகள் ஆண்டாண்டு காலமாக வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது என்று கூறுகின்றனர்.

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் துஷார், சிபிஐ சார்பி பிபி சுனீர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூன்று வேட்பாளர்களிலும் ராகுலுக்கு மக்கள் ஆதரவும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால் அவரது வெற்றி வாய்ப்பும் இப்போதைய நிலவரப்படி சற்று அதிகமாகவே இருக்கிறது என்கிறது இந்த கணிப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x