பெண்களுக்கு எதிராக குற்றம்: பாஜகவின் தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த காங்கிரஸ், ஆம் ஆத்மி

பெண்களுக்கு எதிராக குற்றம்: பாஜகவின் தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த காங்கிரஸ், ஆம் ஆத்மி
Updated on
2 min read

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ய சட்டத்தை பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கிண்டல் செய்துள்ளன.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் 7 கட்டங்களாக மே 19-ம் தேதி வரை நடக்கிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில் சட்டவிரோதமாக அகதிகள் குடியேறுவதைத் தடுக்கும் வகையில் என்ஆர்சி சட்டத்தை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்துவோம் என்றும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டத்தை ரத்து செய்வோம், முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவோம், அயோத்தியில் கோயில் கட்டுவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனும் பிரிவில், பல்வேறு அம்சங்கள் தரப்பட்டு இருந்தன. அதில், உள்துறை அமைச்சகத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படும். "கடினமான சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  எதிராக குற்றம் இழைக்கப்படும்". குறிப்பிட்ட காலத்துக்குள் பலாத்கார குற்றவிசாரணை முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

"பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" எனும் வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ட்விட்டரில் பாஜகவை கிண்டல் செய்துள்ளன.

காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு விஷயத்தில் உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டுகிறது, பாஜகவின் போலியான தேர்தல் அறிக்கை " எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டரின் பதிவிட்ட கருத்தில், " பாஜகவின் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு எதிரானக குற்றம் செய்வதை ஊக்குவிக்கிறது. எப்படினாலும் பாஜக இதற்காக முயற்சிக்கும். உங்களின் உண்மையான நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது " எனக் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in