Published : 08 Apr 2019 06:27 AM
Last Updated : 08 Apr 2019 06:27 AM

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர், உதவியாளர் வீடுகள் உட்பட 60 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.9 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர், உதவி யாளர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை நேற்று சோதனை நடத்தியது. இதில் ரூ.9 கோடி ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மாநில முதல்வராகப் பதவியேற்றார். அவர் சட்டப்பேரவையில் உறுப் பினராக இல்லை. சட்டவிதி களின்படி 6 மாதங்களுக்குள் அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இடைத்தேர்தலில் போட்டி

அவர் தேர்தலில் போட்டியிடு வதற்காக சிந்த்வாடா எம்எல்ஏ தீபக் சக்சேனா அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு வரும் 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்வர் கமல்நாத் போட்டியிடுகிறார். மேலும் சிந்த்வாடா மக்களவைத் தொகுதியில் அவரின் மகன் நகுல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த மக்களவைத் தொகுதியில் இருந்து கமல்நாத் 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் கமல்நாத் பணக்கார அமைச்சராக இருந்தார். தற்போது மாநில முதல்வர்களில் அவரே பணக்கார முதல்வராக உள்ளார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி அவர் ரூ.206 கோடிக்கு சொந்தக்காரர். இப்போது அவரது சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்திருக் கக்கூடும். விவசாயம், ரியல் எஸ்டேட், ஓட்டல், விமான போக்குவரத்து என பல்வேறு தொழில்களில் கமல்நாத்தின் குடும்பம் வியாபித்து பரவியுள்ளது.

இந்தப் பின்னணியில் முதல்வர் கமல்நாத்தின் உறவினர், உதவியாளர்களின் வீடு, திருமண மண்டபங்கள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி வருமானவரித் துறை நேற்று அதிகாலை 3 மணி அளவில் சோதனையைத் தொடங்கியது.

மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூர், டெல்லி, நொய்டா, கோவா உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பு டன் சோதனையை நடத்தினர். இதில் ரூ.9 கோடி ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கமல்நாத்தின் நெருங்கிய உறவினர் ரதுல் புரிக்கு தொடர்பிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவரது எச்பிபிபிஎல் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானியின் வீடு டெல்லியில் உள்ளது. அவரது வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல கமல்நாத்தின் முன்னாள் தனிச் செயலாளர் பிரவீண் கக்கருக்கு போபால், இந்தூரில் வீடுகள் உள்ளன. இரு நகரங்களில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களிலும் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. மத்திய பிரதேச முன்னாள் காவல் துறை அதிகாரியான பிரவீண் கக்கர், முதல்வர் கமல்நாத்துக்கு மிகவும் நெருக்கமானவர். கக்கரின் குடும்பத்தினர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ராஜேந்திர குமார் மிக்லானியும் பிரவீண் கக்கரும் அண்மையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி இரு வரும் கமல்நாத்துக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரின் வீடுகளில் இருந் தும் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாகக் கூறப்படு கிறது.

திசை திருப்பி சோதனை

வருமான வரித் துறை சோதனையின்போது பொது வாக மாநில போலீஸாரே பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் மாநில போலீஸாருக்கு பதிலாக சிஆர்பிஎப் வீரர்களை, வருமான வரித் துறையினர் தேர்ந்தெடுத்தனர்.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புக்காக சிஆர்பிஎப் வீரர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி மாநில அரசின் கவனத்தை வருமான வரித் துறை புத்திசாலித்தனமாக திசை திருப்பியுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் பூபேந்திர குப்தா கூறிய போது, ‘‘மக்களவைத் தேர்தலை யொட்டி நாடு முழுவதும் எதிர்க் கட்சி தலைவர்களின் வீடு, அலுவ லகங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியாவிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘நாட்டின் காவலர்களின் மீது திருடர்கள் குற்றம் சாட்டுகின்றனர்’’ என்று பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x