Published : 11 Apr 2019 03:33 PM
Last Updated : 11 Apr 2019 03:33 PM

ஆந்திராவில் 125 வாக்குகளை அழித்த தேர்தல் அதிகாரி: வாக்காளர்கள் கூச்சலிட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணம் நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு எந்திரத்தை பரிசோதித்தபோது 125 வாக்குகள் அழிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு, அதை அதிகாரிகள் சென்று சரி செய்து வந்தனர்.

இந்நிலையில், மசூலிப்பட்டிணம் நகரில் 135/75 எண் கொண்ட வாக்குப் பதிவு மையத்தில் காலையில் இருந்து வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வந்தது. இந்நிலையில், வாக்கு எந்திரத்தை பரிசோதிக்க தேர்தல் அதிகாரி முயன்றார். அப்போது, காலையில் இருந்து பதிவான 125 வாக்குகளும் திடீரென அழிந்து பூஜ்ஜிய நிலைக்கு வந்தது.

இதைக் கண்டு அந்த தேர்தல் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். அங்கு வாக்குப்பதிவு செய்ய வரிசையில் இருந்த வாக்காளர்களும் இந்த விஷயம் அறிந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தவிஷயம், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கு அந்த தேர்தல் நடத்தும்  அதிகாரி எந்திரத்தை ஆய்வு செய்தபின் அதை மாற்ற உத்தரவிட்டார். ஏற்கனவே வாக்களித்த 125 பேரை திரும்ப அழைத்து வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனர்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஜே.உதய பாஸ்கர் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " மின்னணு வாக்கு எந்திரம் முறையாக இயங்குகிறதா என தேர்தல் அதிகாரி சோதனையிட்டபோது, எந்திரத்தில் பதிவாகி இருந்த 125 வாக்குகளும் திடீரென அழிந்துவிட்டன. இதையடுத்து, வாக்குப் பதிவு செய்த 125 வாக்காளர்களையும் திரும்ப அழைத்து மீண்டும் வாக்குப்பதிவு செய்ய அனுமதித்தோம். பழுதடைந்த இந்த மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதிலாக புதிய எந்திரம் வைக்கப்பட்டு, அதில் வாக்குப்பதிவு நடந்தது " எனத் தெரிவித்தார்.

ஆனால், 125 வாக்காளர்களில் சிலருக்கு மட்டும்தான் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மீண்டும் வாக்களித்துள்ளனர். பெரும்பாலானோருக்கு தகவல் தெரிவிக்கப்படாததால், அவர்கள் வாக்களித்தும், வாக்களிக்காத நிலைதான் ஏற்பட்டுள்ளது.

இதில் கலிசெட்டி சூரியநாரயணா, பிரசா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் 2-வது முறையாக வாக்களிக்க வந்திருந்தனர். அவர்கள் தி இந்துவிடம் கூறுகையில், " நாங்கள் பதிவு செய்த வாக்கு அழிந்துவிட்டதால், மீண்டும் வாக்களிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்ததால், வந்தோம்" எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x