நான் தீவிரவாதத்தை அழிக்க முயல்கிறேன்; காங்கிரஸ் என்னை அகற்ற நினைக்கிறது: பிரதமர் மோடி தாக்கு

நான் தீவிரவாதத்தை அழிக்க முயல்கிறேன்; காங்கிரஸ் என்னை அகற்ற நினைக்கிறது: பிரதமர் மோடி தாக்கு
Updated on
1 min read

தேசத்துக்கு எதிராக நடக்கும் தீவிரவாதத்தை அழிக்க நான் முயல்கிறேன், ஆனால், காங்கிரஸ் கட்சியோ என்னை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

மக்களவைத் தேர்தல் நாளை முதல் தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலம், ஜுனாகத் நகரில் இன்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

''தேர்தல் அறிவித்ததில் இருந்து டெல்லி துக்ளக் சாலையில் இருந்து தேர்தல் ஊழல் தொடங்கவிட்டது.(துக்ளக் சாலையில்தான் ராகுல் காந்தி இல்லம் இருக்கிறது). இதனால்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சில அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளார்கள். இந்தப் பணம் அனைத்தும் ஏழைகளின் பணம். ஏழைகளிடம் இருந்து அவர்களின் சொந்த தலைவர்களே கொள்ளையடித்துச் சேர்த்ததாகும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி, எந்தவிதமான தீவிரமான குற்றத்தையும் ஒருவர் செய்தால்கூட ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசதி யாருக்காகச் செய்திருக்கிறார்கள், அவர்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கா?

கடந்த 5 ஆண்டுகளாக நான் தவறு செய்தவர்களைப் பிடித்து சிறையில் தள்ளினேன். எனக்கு அடுத்த 5 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தால், சிறைக்குள் இருப்பவர்கள் அங்கேயே இருப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலங்கள் அனைத்தும் தற்போது, அந்தக் கட்சிக்குப் பணம் வழங்கும் ஏடிஎம்களாக மாறிவிட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர ஆசைப்படுவது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கத்தான்.

பாகிஸ்தானுக்கு எதிராக நமது வீரர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினால், அது நமது எதிர்க்கட்சியினரைப் பாதிக்கிறது. நம்முடைய தேசம் பாதுகாப்பாக உணரும்போதுதான் வளர்ச்சி அடையும்.

தேசத்தில் இருந்து தீவிரவாதத்தை அகற்ற முயன்று வருகிறேன். ஆனால், எதிர்க்கட்சியினரோ என்னை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கிறார்கள். உங்கள் காவலன், உங்கள் மண்ணின் மைந்தனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கூறாத அவச்சொற்கள் இல்லை.

தேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரைத் துண்டாட வேண்டும், தனியாக பிரதமர் தேவை என்று கோரிக்கை வைத்தவர்களுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in