Last Updated : 19 Apr, 2019 03:05 PM

 

Published : 19 Apr 2019 03:05 PM
Last Updated : 19 Apr 2019 03:05 PM

24 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஒரே மேடையில் முலாயம் சிங், மாயாவதி தேர்தல் பிரச்சாரம்

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பின், பழைய கசப்பான நினைவுகளை மறந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இன்று ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

மெயின்புரியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவை ஆதரித்து மாயாவதி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியைப் போல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம்சிங் யாதவ் என்று மாயாவதி புகழாரம் சூட்டினார்.

கடந்த 1995-ம் ஆண்டு, லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில் தனது தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த மாயாவதியையும், தொண்டர்களையும் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தாக்கினார்கள்.

இதில் மாயாவதி மிகவும் அவமானப்படுத்தப்பட்டு, மிகுந்த சிரமத்துக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பின் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிரிக்கட்சிளாக மாறின.

கடந்த 24 ஆண்டுகளாக இரு கட்சிகளும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்கட்சியும் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 75 தொகுதிகளில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை ஆதரித்து இன்று மாயாவதி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது சமாஜ்வாதி எம்எல்ஏ ஒருவர் மாயாவதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது, முலாய் சிங் யாதவ் எனக்கு அளிக்கும் மரியாதையை மாயாவதிக்கும் அளியுங்கள் என்று தொண்டர்களிடம் தெரிவித்தார்.

முலாயம்சிங் யாதவ் கூட்டத்தில் பேசுகையில், "நீண்ட காலத்துக்குப் பின் நானும், மாயாவதியும் சேர்ந்துள்ளோம். பழைய விஷயங்களை மறந்து சேர்ந்துள்ளோம். இதை நான் வரவேற்கிறேன், அவருக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு அளிக்கும் மரியாதையை மாயாவதிக்கும் தொண்டர்கள் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசுகையில், "சில நேரங்களில் கடினமான சூழல் ஏற்படும் போது, கட்சியின் நலன், தேசத்தின் நலன் கருதி கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். அதுபோலத்தான் இப்போது நான் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளேன்.

நான் முலாயம்சிங்குக்கு ஆதரவாக ஏன் பிரச்சாரம் செய்கிறேன் என்று மக்கள் வியப்பாக இருப்பார்கள் என எனக்குத் தெரியும். பழைய கசப்பான சம்பவங்களான விருந்தினர் மாளிகை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை மறந்துதான் இந்த முடிவை எடுத்தேன்.

சமூகத்தில் அனைத்து தளத்தில் உள்ள மக்களையும் சமாஜ்வாதி எனும் கட்சியின் கீழ் கொண்டு சென்றவர் முலாயம்சிங் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் முலாயம்சிங் சிறந்த தலைவர். குறிப்பாக நரேந்திர மோடி போல் அல்லாது, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ்" எனத் தெரிவித்தார்.

வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கும்போது மாயாவதி, தனது முழக்கமான ஜெய் பீம் என்று முழங்குவார். இன்று ஜெய் பீம் என்ற முழக்கத்தோடு, ஜெய் லோகியா என்றும் முழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x