சத்தீஸ்கர் மாநில தாண்டேவாடாவில் ஐ.இ.டி. குண்டுவெடிப்பு: பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநில தாண்டேவாடாவில் ஐ.இ.டி. குண்டுவெடிப்பு: பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலி
Updated on
1 min read

நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தும் சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் அப்பகுதி எம்.எல்.ஏ பீமா மாண்டவி உட்பட 5 பேர் பலியானது பரபரப்பாகியுள்ளது.

ஐ.இ.டி குண்டை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்ததில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் 4 பாதுகாப்பு வீரர்கள் பலியாகினர்.

ஷியாமாகிரி மலைப்பகுதியில் எம்.எல்.ஏ. பீமா மாண்டவியின் வாகனம் குவக்குண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தது அப்போது மாவோயிஸ்ட்கள் ஐ.இ.டி வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். பிறகு வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதாவது வாகனம் வெடிகுண்டில் சிதறி அதன் பாகங்கள் சாலைகளில் சிதறிக் கிடந்ததாக தொலைக்காட்சி தகவல்கள் கூறுகின்றன, குண்டுவெடிப்பில் தப்பியவர்கள் மீது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிகிறது.

சம்பவ இடத்துக்குப் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில போலீஸ் மூத்த அதிகாரி கிரிதாரி நாயக், “எவ்வளவு பேர் பலியாகினர் என்பதை கணக்கிட்டு வருகிறோம்” என்றார்.

எம்.எல்.ஏ. பீமா மாண்டவிக்கு வயது 40. இவர் 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் தாண்டேவாடா ரிசர்வ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்தி கர்மாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஏப்ரல் 11ம் தேதி தாண்டேவாடாவில் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில் இந்தத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலை அடுத்து மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in