

எனது வாக்கு நீக்கப்பட்டுவிட்டது குடிமகளாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என்று அப்போலா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி புதிய கட்சியாகக் களமிறங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா குடிமகளாக தான் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர் பேசும்போது, “ எனது வாழ்நாளில் இந்திய குடிமகளாக இது மோசமான நாளாகும். நான் ஒட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இது மிகப் பெரிய குற்றம்.
யார் இங்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள். இதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.
ஷோபனாவின் மகளும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசன்னா, “ எனது அம்மாவால் வாக்களிக்க முடியவில்லை. பத்து நாட்களுக்கும் முன்னர் கூட அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. தற்போது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.