Published : 24 Sep 2014 10:01 AM
Last Updated : 24 Sep 2014 10:01 AM

கனவை நனவாக்க அறிவை விரிவாக்க வேண்டும்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேச்சு

‘கனவை நனவாக்க அறிவை விரிவாக்க வேண்டும்’ என பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் குடி யரசு தலைவர் அப்துல்கலாம் அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பங்கேற்றார். அப்போது அவர் திருவள்ளூரை சுற்றியுள்ள பள்ளி களின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கூட்டத்தில் நேற்று கலந்து ரையாடினார். மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள் ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ‘அறிவு உன்னை மகானாக்கும்’என்ற தலைப்பில் கலாம் பேசியதாவது: எனது வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் வழிகாட்டி யாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். இதில், அறிவு சார்ந்த பல விஷயங்கள் உள்ளன. அவை அழிவு வராமல் காக்கும் கருவியான அறிவு, கற்பனை சக்தி, மனதூய்மை, உள்ள உறுதி ஆகிய மூன்று சமன்பாடுகளை உள்ளடக்கியதாகும். கற்பனை சக்தி உருவாக, குடும்பம் மற்றும் பள்ளி சூழ்நிலைகள் முக்கிய காரண மாகிறது. உள்ள உறுதி இளைய சமுதாயத்தின் ஆணி வேராகும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க் கையில் மிக பெரிய லட்சியம் வேண்டும். அதை அடைய அறிவை தேடித்தேடி பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சி வேண்டும். இந்த குணங்கள் இருந்தால் கண்டிப்பாக லட்சியத்தை அடையலாம். கனவு காண்பதென்பது ஒவ்வொரு இளை ஞனுக்கும் முக்கியமான ஒன்றா கும். இந்த கனவுகள் உறக்கத் தில் வருவதல்ல. உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. அப்படிப்பட்ட கனவுதான் உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை கொடுக்கும். அந்த கனவை நனவாக்க, அறிவை விரிவாக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள 60 கோடி இளைஞர்கள்தான் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. நமது நாட்டின் சவால்களை சமாளிக்க இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத் திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச் சையாகவே கற்கும் திறனை அடை வர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பள்ளி வளாகத் தில் மாணவ, மாணவிகள் அமைத் திருந்த அறிவியல் கண்காட்சி யினை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை பாராட்டினார். அது மட்டுமல்லாமல், சிறந்த படைப்பு களை காட்சிக்கு வைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் பரிசுகளை வழங்கினார். பள்ளியின் சார்பில் பிரதமர் நிவாரண நிதியாக வசூலிக்கப்பட்ட 1.30 லட்சம் ரூபாய்க்கான காசோலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x