

மக்களவைத் தேர்தலில், நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு கோரியிருந்த விவகாரம் ஓயும் முன்னர், மகன் ஆனந்த் அம்பானி மோடியின் பேரணியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் ஒரு பிரச்சார வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசும்போது, “தெற்கு மும்பை தொகுதியில் 10 ஆண்டுகள் (2004-2014) எம்.பி.யாக இருந்தவர் மிலிந்த் தியோரா. அவருக்கு இப்பகுதியின் சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி ஆழமான அறிவு உள்ளது என நம்புகிறேன். தெற்கு மும்பையின் மனிதர் மிலிந்த்.
மும்பையில் குறுந்தொழில் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை செழிக்க மிலிந்த் தியோரா பாடுபடுவார். இதன்மூலம் திறமையான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்” என கூறியிருந்தார்.
காங்கிரஸுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்தது தொழில் வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கலந்துகொண்டார். பாந்த்ரா குர்லா வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பேரணியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆனந்த் அம்பானி, மோடி பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கிடையே அப்பா முகேஷ் அம்பானி காங்கிரஸுக்கு ஆதரவு கோரிய நிலையில், மகன் ஆனந்த் அம்பானி பாஜக பேரணியில் கலந்துகொண்டதை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.