Published : 25 Mar 2019 12:05 PM
Last Updated : 25 Mar 2019 12:05 PM

வாழிடத்தை மறந்துவிடும்: குரங்குகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வனத்துறை செய்த புதிய முயற்சி

காடுகளில் இருந்து குரங்குகள் இரைதேடி நகர்பகுதிக்குள் வருவதை தடுக்கும் வகையில், ஒடிசா வனத்துறையினர் புதிய முயுற்சிகளை எடுத்துள்ளனர்.இந்த முயற்சிகளால் குரங்குகள் நகர்பகுதிக்குள் வருவது படிப்படியாக குறையும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர்.

ஒடிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பிஸ்வந்த்பூர், காலடிஹாட் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள பவாந்திபாட்னா, லாஞ்சிகார்க்  சாலையில் நாள்தோறும் பகல்நேரத்தில் ஏராளமான குரங்குகளைக் காண முடியும்.

அந்த வழியாக வாகனங்களில் செல்வோரிடம் உணவுப் பொருட்களை வாங்கி உண்பது, சாலையில் வீசப்படும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு வருவதைக் காணலாம். சில பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்துச் சென்றனர்.

சில நேரங்களில் குரங்குகள் வனத்துக்குள் சென்று உணவு தேட முயற்சிக்காமல், சாலையில் செல்வோர் உணவு ஏதும் தருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கியது.

சிலநேரங்களில் உணவுக்காக வாகனங்களில் செல்வோர் வீசும் உணவுகளை எடுக்க முயற்சிக்கும்போது குரங்களில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நிகழ்வுகளும் ஏற்படுகிறது.

மனிதர்கள் இரக்கப்பட்டு குரங்குகளுக்கு உணவுகளை வழங்குவது ஒருபுறம் இருந்தாலும், மனிதர்களிடம் இருந்து உணவு வாங்கி உண்ணும் அந்த பழக்கம் குரங்குகளின் குணமான இரைதேடி உண்பது எனும் பழக்கத்தை நாளடைவில் மறக்கச் செய்துவிடும், தங்களின் வாழிடம் காடுகள்தான் என்ற நினைவை நாளடைவில் மறந்துவிடக்கூடும் என்று வனத்துறையினர் கருதினார்கள்.

இதுகுறித்து காலஹந்தி மண்டலம்(தெற்கு) வனத்துறை அதிகாரி டி. அசோக் குமார் கூறுகையில், " குரங்குகளை வனத்துக்குள் மீண்டும் விரட்ட பல்வேறு நடவடிக்களையும் எடுத்து வருகிறோம். குறிப்பாக குரங்களுக்கு யாரும் உணவுகளை கொடுக்காதீர்கள் என்று மக்களுக்கு தெரியும் வகையில் ஆங்காங்கே பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வைத்துள்ளோம். வனக் காவலர்கள் நாள்தோறும் ரோந்து சென்று, குரங்களுக்கு யாரேனும் உணவு கொடுக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

நாமாக குரங்குகளை கொண்டுசென்று வனத்துக்குள் விட்டாலும், மீண்டும் இரைதேடி குரங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வரத்தான் செய்யும். ஏதோ 10 குரங்குகள் வரை இருந்தால் வனத்துக்குள் விட முடியும், ஆனால் ஆயிரக்கணக்கான குரங்குகள் இருப்பதால் வனத்துக்குள் கொண்டுபோய் விடுவது சாத்தியமில்லை. உணவுக்காக நாள்தோறும் சாலையில் குரங்குகள் அமர்ந்திருபு்பதையும் பார்க்க முடியவில்லை.

ஆதலால், குரங்குகளுக்கு உணவுகொடுப்பதை நிறுத்தினால், குரங்குகள் வேறுவழியின்றி உணவுதேட வனத்துக்குள் செல்லும். அதேசமயம், வனத்துக்குள்ளும் குரங்குகளுக்கு உணவு தேவை.

அதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, காட்டுப்பகுதியில் ஏராளமான பழமரங்களை நட்டுவைத்து பாதுகாத்து வளர்த்தோம். குறிப்பாக கொய்யாப்பபழம், சீதாபழம், மாதுளை உள்ளிட்ட பல்வேறு மரங்களையும், விரைவில் பலன்கொடுக்கும் மரங்களையும் வளர்த்தோம். இப்போது அனைத்து மரங்களும் பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

ஏறக்குறைய 363 ஏக்கர் வனப்பகுதிக்குள் அதிகமான இடங்களில் பழமரங்கள் பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன. பழமரங்கள் பலன் கொடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இப்போது சாலையில் குரங்குகள் வருவது குறையத் தொடங்கிவிட்டது. சாலையில் செல்வோரிடம் உணவு வாங்கும் குரங்குகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆனால், காலப்போக்கில்  படிப்படியாக குறையும் என்று நம்புகிறோம். இந்த முயற்சி வெற்றி அடைந்துவிட்டால், இதை அடுத்தடுத்த பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x