Last Updated : 23 Mar, 2019 11:13 AM

 

Published : 23 Mar 2019 11:13 AM
Last Updated : 23 Mar 2019 11:13 AM

பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்?; மற்ற மாநிலங்கள் நிலை என்ன? கருத்துக்கணிப்பில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக தமிழக மக்கள்தான் திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்கள்.அதேசமயம் வேறு சில மாநிலங்களில் பிரதமர் மோடி மீது திருப்தி தெரிவித்துள்ளனர். 

ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவா வாக்காளர்கள் அதிகபட்சமாக திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு, நிர்வாகம்  குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனமும், சிவோட்டர் நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு மாநில வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ்  ஏற்கெனவே நடத்திய இரு கருத்துக் கணிப்புகளில் நாட்டிலேயே மிகப் புகழ்பெற்ற தலைவராக மோடிதான் என்று முடிவுகள் தெரியவந்தது. மற்ற தலைவர்களான ராகுல் காந்தி, மம்தா போன்றோர் மோடிக்கு அடுத்த இடங்களில்தான் என்று தெரியவந்தது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி, நிர்வாகம், செயல்பாடு குறித்து நாடு முழுவதும் உள்ள மாநில வாக்காளர்களிடம் சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் இரு நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதின் விவரம் வருமாறு:

பிரதமர் மோடியின் செயல்பாடு, நிர்வாகத்திறன் குறித்து நாட்டில் உள்ள மாநிலங்களில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் திருப்தியும், மகிழ்சியும் தெரிவித்துள்ளார்கள். 13 மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மோடியின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் 74 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் வாக்காளர்கள் 66.3 சதவீதம் பேரும், கோவாவில் உள்ள வாக்காளர்கள் 66.3 சதவீதம்  பேர் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் 65.9 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.

மோடியின் செயல்பாட்டில் 50 சதவீதத்துக்கும் குறைவாக திருப்தியும், மனநிறைவாக அளிப்பதாக 13 மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பாஜக, சிவசேனா கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 47.9 சதவீதம் பேரும், அசாமில் 47 சதவீதம் வாக்காளர்களும், உத்தரப்பிரதேசத்தில் 43.9 சதவீதம் வாக்காளர்களும் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இந்த 3 மாநிலங்களுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடு நிர்வாகத்தில்  43.2 சதவீதம் பேரும், ஜம்மு காஷ்மீரில் 39.6 சதவீதம் பேரும் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே மிகக் குறைவாக தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் இருப்பதிலேயே மிகக்குறைவாக பிரதமர் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் கேரள மாநில வாக்காளர்களில் 7.7 சதவீதம் பேரும், புதுச்சேரியில் 10.7 சதவீதம் வாக்காளர்களும் மோடியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், நாட்டிலேயே மிகக்குறைவாக தமிழக வாக்காளர்களில் 2.2 சதவீதம் பேர்தான் தான் பிரதமர் மோடியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

வர்தா புயல், கஜாபுயல், மக்களுக்கு விரோதமான மத்திய அரசின் திட்டங்கள், நீட் தேர்வு போன்ற பல்வேறு சம்பவங்களில் மத்தியில் ஆளும் பாஜக மீது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்து வந்தது. அதனால்தான் பிரதமர் மோடிக்கு  வரும் போதெல்லாம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன, ட்விட்டரிலும் கோபேக்மோடி டிரன்டாகி வருகிறது. அந்த நிலை கருத்துக்கணிப்பிலும் எதிரொலித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநில வாக்காளர்களில் 12 சதவீதம் பேரும், ஆந்திராவில் 23.6சதவீதம் பேரும் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x