Last Updated : 01 Mar, 2019 08:00 AM

 

Published : 01 Mar 2019 08:00 AM
Last Updated : 01 Mar 2019 08:00 AM

பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு?

மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் போட்டியிட்ட பெங்களூரு தெற்கு தொகுதியில் அவரது மனைவி தேஜஸ்வினியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் 1996-ம் ஆண்டு களமிறங்கிய அனந்த்குமார், தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நீலகேனி போன்ற வலிமையான வேட்பாளர்களாலும் வெற்றிபெற முடியவில்லை. இளம்வயதிலே வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பிடித்த அனந்த்குமார், நரேந்திர‌ மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த நவம்பரில் உயிரிழந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினியை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியின் வெற்றி வேட்பாளராக விளங்கிய அனந்த்குமாரின் மனைவியை நிறுத்தினால், நிச்சயம் வெற்றிபெற முடியும். அனந்த்குமாரின் மறைவால் உருவாகியுள்ள அனுதாபமும், சமூக சேவை மூலமாக தேஜஸ்வினி சம்பாதித்துள்ள நற்பெயரும் அமோக வெற்றியை தேடி தரும் என பாஜக மேலிடத் தலைவர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் அசோக், தேஜஸ்வினிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. தனது ஆதரவாளருக்கு பெங்களூரு தெற்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நந்தன் நீலகேனியை இந்த முறை பாஜக சார்பில் களமிறக்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் பாஜக மேலிடத்துக்கு ஆர்எஸ்எஸ் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x