Last Updated : 09 Mar, 2019 02:27 PM

 

Published : 09 Mar 2019 02:27 PM
Last Updated : 09 Mar 2019 02:27 PM

ராணுவத்தினரை அரசியலுக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் கடற்படை தளபதி வலியுறுத்தல்

புல்வாமா தாக்குதல், பாலகோட் விமானத் தாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தளபதி எல்.ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, முன்னாள் கடற்படைத் தளபதி ராமதாஸ் எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், சமீபத்தில் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல்கள், பாகிஸ்தானின் பாலகோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றை எந்த அரசியல் கட்சியும் தங்களின் அரசியல் நலனுக்காக, லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பது முக்கியமானதாகும். இந்த தாக்குதல் குறித்து பெருமிதம், வெற்றிச் செய்தி போன்றவற்றைத் தேர்தலில் பயன்படுத்தும்போது, அது வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொறுப்புள்ள குடிமகன் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்கிற முறையில் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். ஆனால், சில அரசியல் கட்சிகள், தங்களின் அரசியல் நோக்கத்துக்காக ராணுவத்தின் புகைப்படங்கள், தோற்றம், சீருடை உள்ளிட்டவற்றை அரசியல் லாபத்துக்காக பேரணிகளிலும், ஊடகங்களிலும், பொது இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு ஆழ்ந்த வேதனையையும், கவலையையும் அளிக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம், உணர்வு, ராணுவத்தின் அடிப்படை கட்டமைப்புகள், மதிப்புகள் ஆகியவற்றைச் சிதைப்பதை முழுமையாக ஏற்க முடியாது.

ஆதலால், தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, ராணுவத்தினர் தொடர்பான  புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவிதமான அறிக்கை ஆகியவற்றையும் தவறாக அரசியல் கட்சிகள் சுயலாபத்துக்குப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x