Last Updated : 27 Mar, 2019 04:45 PM

 

Published : 27 Mar 2019 04:45 PM
Last Updated : 27 Mar 2019 04:45 PM

மக்களுக்கு பிரதமர் மோடி உரை: உலக நாடக தின வாழ்த்துக்கள் : ராகுல் காந்தி கிண்டல்

மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமானது குறித்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி குறித்து " உலக நாடக தின வாழ்த்துக்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், விண்வெளியில் எதிரிநாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டத்தை இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

 இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது  "அமெரிக்கா,சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவிடம் செயற்கைக்கோள்களை சுட்டுவீழ்த்தும் திறன் இருக்கிறது. புவியின் குறைந்த நீள்வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை சுட்டுவீழ்த்த முடியும். இதை இந்தியா தற்காப்புக்காக மட்டும் பயன்படுத்தும். இது வரலாற்று சாதனை" என்று தெரிவித்தார்.

இந்த சாதனைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு அமைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரமதர் மோடி மக்களுக்கு உரையாற்றியதை குறிப்பிட்டு  அந்த வாழ்த்துச் செய்தியில் கிண்டல் செய்துள்ளார்.  

அதில் " டிஆர்டிஓ  அமைப்பின் பணிக்கு வாழ்த்துக்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நான் பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இன்று உலக நாடக தினவாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் மோடியை விமர்சித்துள்ளார். அதில் " இன்று நாட்டில் உள்ள பிரச்சினைகளான வேலையின்மை, கிராமங்களில் இருக்கும் சிக்கல், பெண்கள்பாதுகாப்பு, ஆகியவற்றில் இருந்து மக்களை திசைத திருப்பும் வகையில் பிரதமர் மோடிக்கு  அரைமணிநேரம் இலவசமாக தொலைக்காட்சியில் பேச வாய்ப்பு கிடைத்துவிட்டது.

தேசத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு உழைக்கும் இஸ்ரோ, டிஆர்டிஓ அமைப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்த வெற்றி உங்களையே சாரும் " எனத் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கூறுகையில், " பிரதமர் மோடி இன்று பேசும்போது பதற்றத்துடன் காணப்பட்டார்.  காங்கிரஸ் அறிவித்த குறைந்தபட்ச வருமானம் திட்டத்தால் அவர் பயந்துள்ளார். கவலைப்படாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், " எதிரிநாட்டு செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டத்தில் கூட பிரதமர் மோடி அரசியல் செய்கிறார். இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x