Last Updated : 10 Mar, 2019 12:29 PM

 

Published : 10 Mar 2019 12:29 PM
Last Updated : 10 Mar 2019 12:29 PM

மக்களவை தேர்தல் தேதி அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு: 8 கட்டங்களாக நடத்த வாய்ப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி குறித்த அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க உள்ளது.

மக்களவைத் தேர்தல், ஏப்ரல் முதல் மே மாதம் வரை 7 முதல் 8 கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆந்திர பிரதேசம், சிக்கிம், ஒடிசா, அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு வரும் மே மாதத்துடன் 6 மாதங்கள் முடிவடைகிறது என்பதால், அந்த மாநிலத்துக்கும் சேர்த்துத் தேர்தல் நடத்தப்படலாம்.

இதுதொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கின்றனர். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையர் அறிவித்தவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிடும். அதன்பின் எந்தவிதமான திட்டங்களையும், அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட முடியாது.

நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாள்தோறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார். இதனால், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர்களை படிப்படியாக அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே இம்மாத இறுதியில்  அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை வெளியாகும் எனத் தெரிகிறது.

நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏறக்குறைய 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் எனத் தெரிகிறது. எவ்வாறாகினும்,மக்களவைத் தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாகப் பிரித்து  நடத்தப்படவே அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன.

2014- தேர்தல் ஒருபார்வை

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த 16-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்தது. நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே நீண்டநாள் நடந்த தேர்தலாக இது பார்க்கப்பட்டது. ஏறக்குறைய 814.50 மில்லியன் மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக 100 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

543 மக்களவைத் தொகுதிகளிலும் 8ஆயிரத்து 251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 9 கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் 66.38 சதவீதம் வாக்குப்பதிவானது. தேர்தல் வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து 2014, மே 16-ம் தேதி அதாவது, 16-வது நாடாளுமன்றம் காலம் முடிய 15 நாட்கள் இருக்கும் முன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நாடுமுழுவதும் 989 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது இதில் 31. சதவீதம் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 38 சதவீத வாக்குகளையும், 336 இடங்களிலும் வென்று ஆட்சி அமைத்தது.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x