Published : 14 Mar 2019 02:55 PM
Last Updated : 14 Mar 2019 02:55 PM

சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாம் வடக்கன் பாஜகவில் இன்று இணைந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் பாஜகவில் இணைந்தது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டாம் வடக்கன், சோனியா காந்தி தலைமையில காங்கிரஸ் இருக்கும போது, தனியாக ஊடகப் பிரிவை உருவாக்கிக் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வடக்கன் விலகியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு மனோரீதியாக பலவீனமடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.  20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த டாம் வடக்கன் நேரடி தேர்தல் அரசியலில் இதுவரை ஈடுபடாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு ஊடகப் பிரிவை உருவாக்கிக் கொடுத்தபின், பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு வளர்ச்சிபெற்றபின் வடக்கன் ஓரங்கட்டப்பட்டார். அங்கு பிரியங்கா திரிவேதி, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆதிக்கம் செலுத்தினர்.

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாலக்கோட்டில் தாக்குதல் நடத்தியது. இதில் 300 தீவிரவாதிகளுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்தது.

ஆனால், இந்த தாக்குதலுக்கு ஆதாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டன. இதனால் மனவருத்தம் அடைந்த வடக்கன் பாஜகவில் சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர்பிரசாத் முன்னிலையில், இன்று பாஜகவில் முறைப்படி டாம் வடக்கன் இணைந்தார். அதன்பின் டாம் வடக்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " புல்வாமா தாக்குதலுக்கு  பதிலடியாக பாலகோட்டில் நமது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆதாரங்களை ஒரு அரசியல் கட்சி கேட்பது என்பது தேசத்துக்கு எதிரானது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து கனத்த இயத்தோடு விலகினேன். வேறு எந்த வாய்ப்பும் எனக்கு இல்லை. பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பாதையும், திட்டங்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், " டாம் வடக்கன் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய தூணாக முக்கிய கட்டங்களில் இருந்தார். வாரிசு அரசியல் அங்கு நடக்கிறது, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் நிலவுகிறது, சுயமரியாதைக்கு அங்குஇடமில்லை " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே டாம் வடக்கன், தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டுள்ளநிலையில், அதை வழங்குவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x