Last Updated : 31 Mar, 2019 04:34 PM

 

Published : 31 Mar 2019 04:34 PM
Last Updated : 31 Mar 2019 04:34 PM

அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு: ராகுல் காந்தி காட்டம்

தேசத்தின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு, ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆவேசமாகப் பேசினார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநிலத்துக்கு சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் தெலுங்குதேசம் கட்சி, காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜன சேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் விஜயவாடா நகரில் இன்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியதாவது:

தேசத்தைப் பிரிப்பது, தேசத்தில் இருந்து திருடுவதுதான மோடியின் அரசியல். தலித் மக்களும், சிறுபான்மை மக்களும் நாடுமுழுவதும் பாஜக ஆட்சியில் மிரட்டப்பட்டு, தாக்கப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து அச்சமான சூழல் நிலவுகிறது. இதுதான் மோடியின் அரசியல்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் உச்சபட்ச குறிக்கோள் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால், ஒருபோதும் அரசமைப்புச் சட்டத்தை அழிக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த தேசத்தில் தலித் மக்கள், சிறுபான்மை மக்கள், பழங்குடியினர், விவசாயிகள், நலிந்த பிரிவினர் அமைதியாக வாழ உரிமை இருக்கிறது. இந்த தேசம் தனிப்பட்ட ஒருவரின் சொத்தல்ல, அல்லது ஒரு அமைப்பின் சொத்தும் அல்ல.

காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால், பதவி ஏற்ற 2 நாட்களில் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும். சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பதவிஏற்ற இரு நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தாலும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்படும்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு, 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது, லட்சக்கணக்கான மக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை வழங்கியது.

உணவுப் பாதுபாப்பு உரிமை இந்த தேசத்தில் இருந்தது, பள்ளிக்கூடங்களில் நமது குழந்தைகளுக்கு  உணவு வழங்கப்பட்டது, விவசாயிகள், தலித்துகள், பழங்குடியின மக்கள்  நிலத்தைக் காக்க புதிய சட்டம் கொண்டுவந்தோம். ஆனால், 2014-ம் ஆண்டு ஆட்சிக்குவந்த மோடி அனைத்தையும் அழித்துவிட்டார்.

இதோடு மட்டுமல்ல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தி, சிறு, குறு, நடுத்தர தொழில்கள், ஏழைகள், விவசாயிகள் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தாக்குதல் நடத்தினார். அதன்பின் ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்து, சிறு, நடுத்தர கடைக்காரர்களின் வாழ்க்கையை சிக்கலுக்கு ஆளாக்கினார்.

ஏழை மக்கள், நலிந்த பிரிவினர் மீது மோடி போர் தொடுத்து வருகிறார். ஆனால், ஏழ்மையின் மீது காங்கிரஸ் கட்சி துல்லியத் தாக்குதல்நடத்த உள்ளது. நாட்டு மக்களுக்கு நியாயத்தை வழங்க இருக்கிறோம். ஏழ்மை, வறுமைக்கு எதிராக எங்களின் வன்முறையற்ற ஆயுதமாகும்.

தேசத்தில் உள்ள 20 சதவீத ஏழை மக்களுக்கு மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.12 ஆயிரம் கிடைக்கும், ஆண்டு்ககு ரூ.72 ஆயிரம் கிடைக்க வழி செய்யபடும். இந்த திட்டத்தின் மூலம் 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள்  பயன்பெறுவார்கள். ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் கோடி செலவாகும். நான் மோடி அல்ல,  பொய்பேசமாட்டேன். அவர் சொன்னதைப் போல், 15 லட்சம் தருவேன் என்று பொய் கூற மாட்டேன்

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x