மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான போட்டிக்கு தயாராகும் இடதுசாரி கட்சிகள்

மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான போட்டிக்கு தயாராகும் இடதுசாரி கட்சிகள்
Updated on
1 min read

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் கடுமையான போட்டிக்கு இடதுசாரிக் கட்சிகள் தயாராகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த முறை இங்கு காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக ஆகியவை தனித்து களமிறங்குகிறது. இந்த 3 பெரிய கட்சிகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகள் உள்ளன.

1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்து சாதனை படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி, 2011, 2016 பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸிடம் தோல்வி கண்டது. இதனால் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனவே வரும் மக்களவை தேர்தல் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய சோதனைக் களமாக இருக்கும் என்று எதிர்பார்க்க்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஹன்னன் மோல்லா கூறும்போது, “நாங்கள் சந்தித்த தேர்தல்களில் இது மிகவும் கடினமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 4 முனைப் போட்டி இருப்பதால் தேர்தல் களம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிரமமாக இருக்கும்.

திரிணமூல் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக இருக்காது. திரிணமூலுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.

அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் நாங்கள் வலிமையுடன் இருக்கிறோம் என்பதை இதர கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியில் 10 இடதுசாரி கட்சிகள் உள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in