

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது (2007), நிதியமைச் சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் அவரை கைது செய்ய தடை விதித்தது. பின்னர் இந்தத் தடையை நீதிமன்றம் அவ்வப்போது நீட்டித்து வரு கிறது.
இதனிடையே, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று ஏற்றுக்கொண்ட நீதிபதி சுனில் கவுர், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.
இதனிடையே, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ஏற்கக்கூடாது என சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி, தீர்ப்பு வரும் வரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.