Published : 07 Mar 2019 12:44 PM
Last Updated : 07 Mar 2019 12:44 PM

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 9 பேர் காங்கிரஸூக்கு மாற திட்டம்?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அணிக்கு வர தயாராக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்தர் கோச்சார் கூறியுள்ளார்.

பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் ஆத்மி அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்கு டெல்லி தொகுதிக்கு மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வேடபாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை அறிவித்து விட்டபோதிலும் கூட்டணி கதவை ஆம் ஆத்மி மூடவில்லை.

காங்கிரஸூடன் ஆம் ஆத்மி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என காங்கிரஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்தது.  பாஜகவுக்கு எதிரான வாக்கை பிரிக்க காங்கிரஸ் உதவி செய்கிறது, பாஜக - காங்கிரஸ் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார்.

இந்தநிலையில் டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 9 பேரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ சந்தீப் குமார் சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே சந்தீப் குமார் மட்டுமின்றி மொத்தம் 9 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அணிக்கு வர தயாராக இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அணி மாறலாம் எனவும் டெல்லி காங்கிரஸ் நிர்வாகி ஜிதேந்தர் கோச்சார் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x