Published : 19 Mar 2019 01:27 PM
Last Updated : 19 Mar 2019 01:27 PM

ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கருத்து கேட்பா? - ராகுல் திட்டத்துக்கு ஷீலா தீட்சித் கடும் எதிர்ப்பு

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது தொடர்பான முடிவெடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி மூலம் நடத்தி வரும் கருத்து கேட்பு நடவடிக்கைக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அதற்கு காங்கிரஸ் உடன்படாத சூழலில் அக்கட்சியை மிரட்டும் பொருட்டு, டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் ஆத்மி அதிரடியாக அறிவித்தது. வேட்பாளர்களை அறிவித்து விட்டபோதிலும் கூட்டணி கதவை ஆம் ஆத்மி மூடவில்லை.

காங்கிரஸூடன் ஆம் ஆத்மி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என காங்கிரஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்தது. ஆம் ஆத்மியும், காங்கிரஸூம் தனித்து போட்டியிட்டால் 7 தொகுதிகளையும் பாஜக கைபற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆம் ஆத்மியுடன் சமரசம் செய்ய காங்கிரஸ் தலைமை முயன்று வருகிறது. இதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் மொபைல் ஆப் வழியாக கருத்து கேட்கப்போவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இந்த பணிகள் தற்போது முடிந்துள்ளன.

ஆனால் ராகுல் காந்தியின் இந்த முயற்சிக்கு, டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் மற்றும் 3 செயல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கட்சித் தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கும் முடிவு காங்கிரஸூக்கு தொலைநோக்கு அடிப்படையில் பெரும் பாதிப்பாக அமைந்து விடும்.

தொண்டர்களிடம் கருத்து கேட்டு என்ற அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவுகள் கட்சியின் நடவடிக்கைகளை முடக்கி விடும். டெல்லியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி என இருக்கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்ற செயல் திட்டமே ஏற்புடையதாக இருக்கும்’’ எனக் கூறியுள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x