அபிநந்தன் விடுதலை: திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்; போரை தவிர்க்க போராடிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்

அபிநந்தன் விடுதலை: திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்; போரை தவிர்க்க போராடிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்
Updated on
2 min read

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தபோதிலும், இதற்காக திரைமறைவில் ஏராளமான காய் நகர்த்தல்கள் நடந்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இந்த விகாரத்தில் பின்னணியில் இருந்து  பெரும் முயற்சி மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது.

இருநாடுகள் இடையே பதற்றம் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டன. இதையடுத்து அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இம்ரான் கானின் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல்வேறு ராஜநந்திர நகர்வுகள் திரைமரைவில் நடந்துள்ளன.

மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், தூதர்கள் மூலம் பல பகுதிகளிலும் தொடர்புகள் நடந்துள்ளன. இம்ரான் கானின் அறிவிப்புக்கு ஒரு சில மணிநேரத்துக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா- பாகிஸ்தானில் இருந்து கூடிய விரைவில் நல்ல தகவல்கள் வரவுள்ளன, நாங்கள் மத்தியஸ்தம் செய்து பிரச்சினை தீர்க்க முயல்கிறோம் என அறிவித்தார்.

அதன் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் அளவிலான தகவல் பரிமாற்றம் பாகிஸ்தானுடன் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்தய அரசின் சார்பிலும் இந்த நாடுகளுடன் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. எனினும் நிபந்தனை ஏதுமின்றி அபிநந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதி காட்டியது.

இதுபோலவே அமெரிக்காவை தவிர சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இந்த விவகாரத்தில் தீர்வு காண பெரும் முயற்சி எடுத்துக் கொண்டன. சவுதி அரேபியா அல் ஜூபைர் ‘முக்கிய தகவல்களுடன்’’ இஸ்லாமாபாத் செல்லவுள்ளேன் என அறிவித்தார். இந்தியாவுக்கான சவுதி அரேபியா தூதர் சவுத் அல்- சாத்தி டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

 ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும், அபுதாபியின் இளவரசருமான முகமது பின் சயாத்தும் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். முகமது சயாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தெரிவித்தார்.

போரை தவிர்க்க தீவிர முயற்சி

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடக்கக்கூடாது என்பதில் சவுதி அரேபியா இளவரசர் சல்மான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது சயாத்தும் தீவிரமாக இருந்தனர். சவுதி இளவசர் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது இருநாடுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதுபோலவே ஐக்கிய அரசு அமீரகமும் பெருமளவு முதலீடு செய்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகஅளவில் சவுதியும், ஐக்கிய அரபு அமீரகமும் முதலீடு செய்துள்ள நிலையில் போர் ஏற்பட்டால் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்பதால் அதனை தவிர்கக இருநாடுகளும் தீவிரம் காட்டியதாக தெரிகிறது.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in