

எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்தில் 157 பேர் பலியானதன் எதிரொலியாக, இந்தியாவில் போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ்ரக விமானங்கள் இயக்குவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
ஆனால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் போயிங் 737 மேக்ஸ்8 ரகத்தில் 8 விமானங்களும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 5 விமானங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவின் அடிஸ் அபபா நகரில் இருந்து கென்யாவின் நைரோபி நகருக்கு சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த விமானம் போயிங் நிறுவனத்தின் 737-மேக்ஸ் ரக விமானமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தோனேசியாவின் லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது 737 மேக்ஸ் ரக விமானமாகும். இந்த விபத்தில் 180 பேர் பலியானார்கள். இதனால், 737 ரக மேக்ஸ் ரக விமானத்தில் பாதுகாப்பு முறைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பல்வேறு நாடுகள் இந்த ரக விமானங்களை இயக்கத் தடை விதித்து வருகின்றன.
இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் ட்விட்டரில் நேற்று இரவு ்றிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், " போயிங் நிறுவனத்தின் 737-மேக்ஸ் ரக விமானங்களை இந்தியாவில் இயக்க தடை விதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இயக்குவதற்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பது குறித்து அனைத்துக் கட்ட பரிசோதனையும் செய்து, உறுதி செய்தபின் முடிவு எடுக்கப்படும். அதுவரை 737 விமானங்கள் இயக்கக்கூடாது. அனைத்து பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். இந்த விமானங்கள் தொடர்பாக உலக அளவில் நிறுவனங்களுடனும், நாடுகளுடனும், விமான தயாரிப்பு நிறுவனங்களுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் " எனத் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின்படி இன்று மாலை 4 மணியுடன் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கம் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.