

மத்திய அரசு 35ஏவில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டதை அடுத்து காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்த காஷ்மீர் அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ள விவரம்:
மத்திய அரசு, 'ஜமாத்-இ-இஸ்லாமி' சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்துள்ளது. மேலும், சட்டப்பிரிவு 35 ஏ மீது புதிய திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
இதனை அடுத்து காஷ்மீரில் பதட்டம் உருவாகும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக ஸ்ரீநகரின் சில பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரின் பழைய நகரப் பகுதிகளில் உடனடியாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை அடுத்து பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வன்முறையைத் தூண்டும் பதிவுகள் மற்றும் படங்களை பரிமாற்றம் செய்துகொள்வதைத் தடுப்பதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்போன் மற்றும் பிராட்பேண்ட் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
இவ்வாறு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மத்திய அமைச்சரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு பதவி உயர்வில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை நீட்டித்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நீட்டித்தும் சட்டப்பிரிவு 35ஏவில் சில திருத்தங்களை பரிந்துரைத்தது.
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் எதுவும் ஏற்கெனவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்காக உள்ள சட்டப்பிரிவு 370ஐ வையோ அல்லது காஷ்மீர் குடிமக்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கும் மாநில சட்டமன்றத்திற்கான அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 35ஏயோ பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.