Last Updated : 09 Mar, 2019 10:30 AM

 

Published : 09 Mar 2019 10:30 AM
Last Updated : 09 Mar 2019 10:30 AM

வேலைவாய்ப்பை உருவாக்கவில்லையா?, உருவாக்கியதாகப் பொய் சொல்கிறார்களா?- மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

வரும் மக்களவைத் தேர்தலில் 3 பிரச்சினைகள்தான் பிரதானமாகப்பேசப்படும். முதலாவதாக வேலைவாய்ப்பு, 2-வதாகவும் வேலைவாய்ப்பு, 3-வதாகவும் வேலைவாய்ப்புதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பான(சிஐஐ) நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை, ஏராளமான சவால்களைச் சந்தித்து வருகிறது என்று தெரிவித்திருந்தது. கடந்த சில மாதங்களாகத்தான் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி இருந்தது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறுகையில், " வரும் மக்களவைத் தேர்தலில் 3 பிரச்சினைகள்தான் பிரதானமாகப் பேசப்படும். முதலாவதாக வேலைவாய்ப்பு, 2-வதாகவும் வேலைவாய்ப்பு, மூன்றாவதாகவும் வேலைவாய்ப்புதான்.

மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கிறதே அது மோசமா? அல்லது, வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டதாகப் பொய் கூறுகிறதே. இது மோசமா? இரண்டில் எது மோசம்?

வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் அந்த விவரங்கள் பொய்யானவே என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, தனது ஆதங்கத்தையும், கவலைகளையும் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் மற்ற அமைப்புகளும் குரல்கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

ரஃபேல் விவகாரத்தில், கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறியது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று, நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை அந்த ஆவணங்களைத் திருடிய திருடன் வியாழக்கிழமை திருப்பிக் கொடுத்துவிட்டாரோ, ரஃபேல் குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேட்டுக்கு ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது, வெள்ளிக்கிழமை சமாதானமாகப் போவது குறித்து சைகை அளிக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவுக்கு சல்யூட் செய்கிறேன்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x