

எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் முகமூடித் திருடர்கள் நுழைந்து பயணிகளைத் தாக்கி உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்றிரவு உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
நேற்றிரவு (சனின்கிழமை) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டேராடூனிலிருந்து சஹரன்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் குறைவான பயணிகளே இருந்தனர். எனினும் 53 நிமிடங்களில் மூன்று பெட்டிகளில் ப்யணித்த அனைவரிடமும் கொள்ளையடித்து அவர்கள் தப்பித்துச் சென்றனர்.
பாலியா கேரி என்ற இடத்தில் நின்ற ரயில் மீண்டும் புறப்பட்டு சஹரன்பூர் நெருங்குவதற்கு முன்பாக ஒரு காட்டுக்குள் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென முகமூடி அணிந்த சிலர் நுழைந்தனர். கொடூர ஆயுதங்களைக் காட்டி பயணிகளிடமிருந்து நகை, பணம் உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையடித்தனர். மறுத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்களையும் நடத்தினர்.
எனினும், கொள்ளைச் சம்பவத்தை அறிந்த ரயில் இன்ஜின் டிரைவர், ரயில்வே பாதுகாப்புப் படைக்கும் (ஆர்பிஎப்) சஹரன்பூர் அரசு ரயில்வே போலீஸுக்கும் (ஜிஆர்பி) தகவல் அளித்த உடனே சஹரன்பூர் ரயில்வே போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். எனினும் ரயில் அதற்குள் ரூர்கி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பயணிகளிடமிருந்து வாக்குமூலங்களைக் கேட்டுப் பதிவு செய்துகொண்ட ரயில்வே போலீஸ் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.