"வெறுங்கையுடன் ஆந்திராவுக்குள் வர வெட்கமில்லையா?"-மோடிக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி

"வெறுங்கையுடன் ஆந்திராவுக்குள் வர  வெட்கமில்லையா?"-மோடிக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றாமல், வெறுங்கையுடன் ஆந்திராவுக்குள் வர வெட்கமில்லையா என்று பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் ஆட்சியின்போது தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த நிலையில், அதை நிறைவேற்றவில்லை.

இதனால், பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தொடர்ந்து சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்துக்கு இன்று பிரதமர் மோடி வர உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, அதை ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

 அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஆந்திரா மறுசீரமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 59 மாதங்கள் ஆகிவிட்டன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 57 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்கிற பிரதமர் மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

நான் தனிப்பட்ட முறையில் புதுடெல்லிக்கு 29 முறை சென்று பிரதமர் மோடியை இதற்காகச் சந்திக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் மாநிலத்துக்குச் செய்த துரோகம், அநீதி, ஏமாற்றுத்தனம் ஆகியவற்றை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தேசத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஆந்திர மாநிலம், தனது உரிமைக்காக நடத்தும் தர்ம போராட்டத்துக்குப் பதில் அளித்துவிட்டார்கள். ஆனால், பாஜகவும், பிரதமர் மோடியும்  பதில் அளிக்கவில்லை.

நீங்கள் விசாகப்பட்டினத்துக்கு வரும் போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால், மக்கள் அடைந்திருக்கும் கோபத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

5 கோடி மக்களின் பிரதிநிதியாய் நான் உங்களின் துரோகம் குறித்து உங்களிடம் கேள்வி கேட்கிறேன். மக்களின் உணர்வுகளை மக்களின் பிரதிநிதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்த மன்மோகன் சிங் வாக்குறுதியை நிறைவேற்றாமல், வெறுங்கையுடன் நீங்கள் வருவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா. 5 கோடி மக்களின் பிரதிநிதியாய் நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி வரும்போது நான் மட்டுமல்ல அனைவரும் கறுப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்''.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது, போலாவரம் திட்டம், அமராவதி நகரத்துக்கு நிதி அளிப்பது, வருவாய் பற்றாக்குறையை சரிகட்டுவது, விசாகப்பட்டினம், விஜயவாடாவில் மெட்ரோ ரயில் திட்டம், சட்டப்பேரவைத் தொகுதிகளை அதிகப்படுத்துவது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in