

மூன்று மக்களவை மற்றும் 9 மாநிலங்களில் உள்ள 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இதில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அடித்த மோடி அலை இன்னும் தொடர்கிறதா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தலா ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
தெலங்கானா முதல்வரானதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
மேற்கண்ட மூவரும் ராஜினாமா செய்த குஜராத்தின் வதோதரா, உபியின் மெயின்புரி மற்றும் தெலங்கானாவின் மேடக் ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மேலும் உபியின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட மோடிக்கு சாதகமாக அலை வீசியதே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில் பாஜக பெறும் வெற்றியை பொறுத்து, மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலை ஓய்ந்ததா? இல்லையா? என்பது தெரியும் என்பதால், அனைத்து தரப்பினராலும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இடைத் தேர்தல் முடிவுகள் 16ம் தேதி வெளியாகின்றன.