Published : 26 Mar 2019 10:53 AM
Last Updated : 26 Mar 2019 10:53 AM

‘‘அமித் ஷாவும், மோடியும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றனர்’’ -முரளிமனோகர் ஜோஷி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் என்னை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறிவிட்டனர் என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கான்பூர் தொகுதி எம்.பியாக இருக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை விரும்பவில்லை என்று தனியார் செய்தி சேனல், ஆங்கில இணையதளம் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே குஜராத் காந்திநகரில் கடந்த 5 முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக இருந்து வரும் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை சீட் அளிக்கப்படவில்லை. அத்வானிக்கு 91வயது ஆகியதால், வயதுமூப்பு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல முரளி மனோகர் ஜோஷிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வருத்தம்

முரளி மனோகர் ஜோஷிடம், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற தகவலை பாஜக கட்சியின் பொதுச்செயலாளர் ராம் லால் தெரிவித்துள்ளதாக ஜோஷி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முரளி மனோகர் ஜோஷியிடம்,கான்பூர் தொகுதியில் மீண்டும் தாங்கள்  போட்டியிட வேண்டாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக ராம் லால் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது

அதற்கு "நான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிற தகவலை என்னிடம் கூறுவதற்கு உங்களை பயன்படுத்தியது எனக்கு வேதனையளிக்கிறது" என்று ராம்லாலிடம், முரளிமனோகர் ஜோஷி வருத்தம் தெரிவித்துள்ளாதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு தான்  போட்டியிட்டு வென்று வாரணாசி தொகுதியை பிரதமர் மோடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முரளி மனோகர் ஜோஷி விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கான்பூரில் போட்டியிட்ட ஜோஷி 57 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

2014-ம் ஆண்டில் மார்க்தர்ஷக் மண்டல் குழுவில் இடம் பெற்ற பாஜக மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தாமாகவே முன்வந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக தலைமை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அத்வானி, சாந்தகுமார், முரளிமனோகர் ஜோஷி, கரியா முண்டா ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை.

பழிவாங்கல்?

இதுதவிர நாடாளுமன்றத்தில் மதிப்பீட்டுக்குழுவின் தலைவராகவும் முரளி மனோகர் ஜோஷி செயல்பட்டு வருகிறார். பல்வேறு விஷயங்களில், தருணங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை தனது கேள்விகளால் அவமானத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள், கங்கை நதி சுத்திகரிப்பு, வங்கி வாராக்கடன், ரகுராம் ராஜன் கடிதம் அளித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு  பல்வேறு கேள்விகளை முன்வைத்தார் ஜோஷி. இதனால், முரளி மனோகர் ஜோஷிக்கு சீட் வழங்காமல் இருந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரச்சார பட்டியலிலும் இல்லை

இதற்கிடையே நேற்று இரவு பாஜக சார்பில் நாடுமுழுவதும்  சென்று பேசும் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மோடி, நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, ஆதித்யநாத், அமித் ஷா உள்ளிட்ட 40 தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரின் பெயர்கள் விடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x