Last Updated : 12 Mar, 2019 03:20 PM

 

Published : 12 Mar 2019 03:20 PM
Last Updated : 12 Mar 2019 03:20 PM

வாக்குறுதி அளித்தீர்களே..மக்களின் கேள்விகளை சந்திக்க தயாராகுங்கள்: பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் குறித்து மக்கள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள், மக்களைச் சந்திக்க தயாராக இருங்கள் என்று பாஜகவை கிண்டல் செய்துள்ளது சிவசேனா கட்சி.

சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில், 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அளித்த வாக்குறுதிகளையும், நிறைவேற்றாமல் மறந்ததையும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஆட்சியில் அமர்ந்தது பாஜக. இப்போது 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அந்த கட்சி எதிர்நோக்குகிறது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல 11-ம் தேதி முதல் மே 19-ம்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2014-ம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேட்பார்கள், அதை எதிர்கொண்டு பதில் அளிக்க பாஜக தயாராக இருக்க வேண்டும். காஷ்மீர் பகுதியில் அமைதி ஏற்படுவது முதல், ராமர் கோயில் கட்டுவது வரை கேள்வி கேட்பார்கள்.

பிரதமர் மோடி, மனதோடு பேசுகிறேன்(மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி நடத்தினார், வரும் மே 23-ம் தேதி மக்களின் மன் கி பாத் நிகழ்ச்சி வெளியாகும்(தேர்தல் முடிவுகள்)

மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்ற முடியாது என்பது வரலாறு. பிரச்சாரத்தின் போது மக்கள் கேள்வியும் கேட்பார்கள், அதேசமயம், வாக்குசீட்டு மூலம், மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் பதிலும் அளிப்பார்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியும், ராமர் கோயில் கட்டப்படும் என்கிற இரு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி கேட்டால் பதில்  சொல்ல தயாராக இருங்கள்.

தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு பயன்படும் மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது மக்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகள் மின்னணு வாக்கு எந்திரங்கள் பணத்தின் சக்தியால் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அதை பயன்பாட்டில் இருந்து நிறுத்திவிட்டன. ஆனால், ஏன் மின்னணு எந்திரங்களை தொடர்ந்து அரசு வலியுறுத்துகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால், பிரதமரும் பல மாநில முதல்வர்களும் புதிய கட்டடிடங்கள் திறப்புவிழா, அறிவிப்புகள் வெளியிடுவது, திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் பரபரப்பாக இருக்கிறார்கள்.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x