கோ பேக் மோடி: அமேதி செல்லும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு: போஸ்டர்கள் ஒட்டிய சமாஜ்வாதி நிர்வாகி

கோ பேக் மோடி: அமேதி செல்லும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு: போஸ்டர்கள் ஒட்டிய சமாஜ்வாதி நிர்வாகி
Updated on
1 min read

தமிழகத்தில் மட்டும்தான் பிரதமர் மோடியின் வருகையின் போது 'கோ பேக் மோடி' என்ற எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில், இப்போது அமேதியிலும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி மக்களவைத் தொகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ரஷ்யாவுடன் சேர்ந்து ரைபிள் துப்பாக்கிகள் தயாரிக்கும் கலாசினிகோவ் ரைபிள் துப்பாக்கித் தயாரிப்பு ஆலைக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அமேதி மக்களவைத் தொகுதிக்கு பிரதமர் மோடி செல்வது இது முதல் முறையாகும். மக்களவைத் தேர்தலின்போது அமேதிக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி மோடி கடைசியாக வந்தார். அதன் பின் வரவில்லை.

கவுரிகஞ்சில் உள்ள கவுஹர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், அமேதி மக்களுக்கு  கல்வி, சுகாதாரம், உற்பத்தித் துறை தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமேதி தொகுதி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதாகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தப் பாதாகைகளையும், சுவரொட்டிகளையும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜெய்சிங் பிரதாப் யாதவ் என்பவர் ஒட்டியுள்ளார். ''5 ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை என்ன என்றும், கோ பேக் மோடி'' என்றும் இந்தியில் வாசகங்கள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சமாஜ்வாதிக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான பிரதாப் யாதவ், அமேதி தொகுதியை பிரதமர் மோடி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகிறார் என்று குற்றம் சாட்டினார். அமேதி தொகுதிக்கு வர வேண்டிய மெகா உணவுப் பூங்கா, இந்துஸ்தான் பேப்பர் மில், ஐடி நிறுவனங்கள் ஆகியவற்றை இங்கிருந்து மோடி வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in