

ஊழலுக்கு எதிராகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடும் மக்கள் அனைவரும் காவலாளிதான் எனும் செய்தியுடன் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார்.
ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த ஊழல் குறித்த பேச்சின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி ஒரு திருடன் என்று மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி அடிக்கடி கூறிவரும் காவலாளி ஒரு திருடன் எனும் வார்த்தைக்குப் பதிலடி தரும் வகையில் இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, தான் மட்டும் காவலாளி அல்ல, மக்கள் அனைவரும் காவலாளிகள்தான் என்று காவலாளி என்ற வார்த்தையை பொதுமைப்படுத்திவிட்டார். இதன் மூலம் காவலாளி என்ற வார்த்தையை இனிமேல் ராகுல் காந்தி பயன்படுத்துவாரா என்பதும் தெரியவில்லை.
பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில், "உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி 3 நிமிடங்கள் ஒளிபரப்பாகக்கூடிய வீடியோ ஒன்றையும் தனது தளத்தில் பதிவிட்டுள்ளார்.