நியூஸிலாந்து சம்பவம்; பிரதமர் மோடி கடும் கண்டனம்

நியூஸிலாந்து சம்பவம்; பிரதமர் மோடி கடும் கண்டனம்
Updated on
1 min read

நியூஸிலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அறிந்து கடும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த சம்பவத்துக்கு பிரதமர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தீவிர வாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் என்றும், தீவிர வாதத்துக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் வன் முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

9 பேர் மாயம்

இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக நியூஸி லாந்தில் உள்ள இந்தியத் தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்தார். கூடுதல் தகவலுக்காக இந்தியத் தூதரகம் காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தாக்குதலில் இறந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என்றும், ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in