நியமன பதவி வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மீது வழக்கு

நியமன பதவி வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மீது வழக்கு
Updated on
1 min read

மத்திய அரசில் நியமனப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் உள்பட 8 பேர் மீது மோசடி வழக்கின் கீழ் தெலங்கானா போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யதுள்ளனர்.

ஆனால், பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தன்மீது எந்த குற்றமும் இல்லை என மறுத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த 2015-ம் ஆண்டு ஈஸ்வர ரெட்டி என்பவரை ஒரு பெண்ணும் அவரின் கணவரும் மத்திய அரசில் நியமனப் பதவி பெறுவதற்காக அணுகியுள்ளனர். ஈஸ்வர ரெட்டி பாஜகவில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடமும், ஆணிடமும், கிருஷ்ணா கிஷோர் என்பவரைத் தெரியும், அவர்  பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்றார். இந்த  பதவிக்காக ரூ.2.17 கோடியை அந்த பெண்ணும் அவரின் கணவரும் வழங்கியுள்ளார்கள்

அவர்களிடம் நிர்மலா சீதாராமன் கையொப்பமிடப்பட்ட பார்மா எக்சில் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக  போலியான கடிதத்தையும் காட்டினார். அப்போது நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், எங்களுக்கு பதவி கிடைக்கவில்லை, பணத்தை திருப்பிக் கேட்டபோது முரளிதர ராவ் உள்ளிட்டோர் எங்களை மிரட்டினார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் நீதிமன்றம் மூலம் சென்றதால் போலீஸார் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி, கிரிமினல் நோக்கத்துடன் செயல்படுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முரளிதர் ராவ் மறுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " தற்போதுள்ள பிரச்சினைக்கும், எப்ஐஆர்க்கும் எனக்கும் தொடர்பில்லை. நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளை என்னுடைய வழக்கறிஞர்கள் நிறுத்த உதவி செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.

தெலங்கானா பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் கூறுகையில், " எங்களுடைய தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் மீது அற்பமான புகாரை வேண்டுமென்றே சிலரால், கெட்டநோக்கத்துடன் கொடுக்கப்பட்டு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் நற்பெயருக்கும், பொதுச்செயலாளர் பெயருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள். சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in