Published : 01 Mar 2019 06:39 PM
Last Updated : 01 Mar 2019 06:39 PM

‘அகந்தையுடன் மத்திய அரசு செயல்படுவதற்கான மற்றோர் உதாரணம்’: ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு தடைக்கு மெஹ்பூபா கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.

 

தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், மாநிலத்தில் பிரவினைவாத செயலை ஊக்குவிப்பதாகவும் தகவல் வந்ததையடுத்து ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பை இந்திய அரசு தடை செய்தது. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபின், ஜம்மு காஷ்மீரில் போலீஸார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஏறக்குறைய 100 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர்.

 

ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கடந்த 1990களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995-ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

 

இதனிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், மாநிலத்தில் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுவதிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் குழுவில் இந்த அமைப்பைத் தடை செய்து உத்தரவிடப்பட்டது.

 

இந்நிலையில் இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கருத்துகளுக்கு இடையேயான போராட்டக் களம்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால் அரசு பலத்தைப் பிரயோகிக்கிறது. ஜமாத் -இ -இஸ்லாமி (ஜம்மு அன்ட் காஷ்மீர்) அமைப்பைத் தடை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

 

காஷ்மீர் அரசியல் விவகாரங்களை அகந்தையுடனும் பலப் பிரயோகத்துடனும் மத்திய அரசு அணுகுவதற்கான மற்றோர் உதாரணம் இது'' என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x