Published : 01 Mar 2019 04:35 PM
Last Updated : 01 Mar 2019 04:35 PM

நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தானி பயணிகளுக்கு உணவு அளித்த இந்தியா

அட்டாரி ரயில் நிலையம் அருகே நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தானி பயணிகளுக்கு இந்தியா சார்பில் உணவளிக்கப்பட்டது.

 

புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு விமானங்களும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து வந்தன. இதில் பாகிஸ்தானிய விமானமும் இந்திய விமானங்கள் இரண்டும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானி அபிநந்தன் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டார்.

 

இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், இந்தியாவுக்கு இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் நேற்று திடீரென அறிவித்தது.

 

இதனால் கராச்சியில் இருந்து நேற்று புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், லாகூர் வரை வந்தது. அந்த ரயிலில் இந்தியாவுக்குப் பயணித்த 16 பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது எனவும் பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். 

 

இதனிடையே நடு வழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தானி பயணிகள், அட்டாரி ரயில் நிலையத்துக்கு வெளியே, அநாதரவாக நின்றனர். அமிர்தசரஸ் அருகே இருந்த அவர்களுக்கு இந்திய பஞ்சாப் காவல்துறை சார்பில் உணவு அளிக்கப்பட்டது.

 

இந்த செய்தியை பாகிஸ்தானிய இதழான 'டான்' வெளியிட்டுள்ளது.

 

ஃப்ரண்ட்ஷிப் எக்ஸ்பிரஸ்

ஃப்ரண்ட்ஷிப் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும்  சம்ஜோதா எக்ஸ்பிரஸ், டெல்லி மற்றும் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் வரை இயக்கப்பட்டு வந்தது. இருநாடுகளிடையே நட்பை குறிக்கும் வகையில் இந்த  ரயில் இயக்கப்பட்டது. வாரத்தின் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படுவது வழக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x