Last Updated : 30 Mar, 2019 02:08 PM

 

Published : 30 Mar 2019 02:08 PM
Last Updated : 30 Mar 2019 02:08 PM

மே.வங்கத்தில் பாஜகவுக்கு 4 மடங்கு இடங்களில் வெற்றி; மம்தாவுக்கு லேசான பின்னடைவு: நீல்சன் கருத்துக்கணிப்பில் தகவல்

மேற்கு வங்க மாநிலத்தி்ல் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரிய எழுச்சிபெற்று,  கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 மடங்கு இடங்களில் வெற்றி பெறும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என்று ஏபிபி நீல்சன் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தார்போல், அதிகமான மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் மேற்கு வங்கம். 42 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் அதிகமான இடங்களில் வெல்லும் கட்சி மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பதை நிர்ணயிக்கும் சக்தி கொண்டதாக மாறும்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடங்களைப் பிடிக்க வாய்ப்பு என்பது குறித்து ஏபிபி நியூஸ், நீல்சன் ஆகியவை இணைந்து மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில்  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியி்ல் இருந்த கம்யூனிஸ்ட்டை ஆட்சியி்ல இருந்து அகற்றி கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 40 சதவீதம் பெண்களுக்கும், 18 சதவீதம் புதுமுகங்களுக்கும் மம்தா பானர்ஜி வாய்ப்பு அளித்துள்ளார். இதனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக அரசியல் செய்துவந்த மம்தா பானர்ஜிக்கு இந்த முறை பாஜக கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களாக மாநிலத்தில் பல்வேறு பிரச்சாரங்கள், போராட்டங்கள், பேரணிகளை பாஜக நடத்தியது.

இதனால், இந்துக்கள் வாழும் பகுதியில் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டது பாஜக. ஆனால், தேர்தல் நேரம் வேளையில் பாஜகவின் பிரச்சாரத்துக்கு பல்வேறு தடைகளையும், இடையூறுகளையும் மம்தா உருவாக்கினார். இவை அனைத்தும் தேர்தலில் எதிரொலிக்கும். அதேசமயம், சாராத சிட்பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ சோதனைக்கு எதிராக மம்தா செய்த போராட்டமும் எதிரொலிக்கும்.

 இந்த தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையிலான பெரும் போட்டியாக மாறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கின் முன் பாஜக செல்வாக்கு எடுபாடாது என்கிற போதிலும் கருத்துக்கணிப்பில் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது பாஜக.

அன்று 34

இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 31 இடங்களைக் கைப்பற்றும் எனக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் 39.4 சதவீத வாக்குகளைக் கைப்பற்றி 34 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் வென்றது.

ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் லேசான சரிவு ஏற்படும் மம்தா கட்சியால் 31 இடங்களில்தான் வெல்ல வாய்ப்புள்ளது எனத்தெரியவந்துள்ளது. அதாவது கடந்த தேர்தலைக் காட்டிலும் 3 இடங்களைக் குறைவாகப் பெற திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புள்ளது.

தலைநகர் கொல்கத்தாவில் உள்ள 7 தொகுதிகளான கொல்கத்தா வடக்கு, தெற்கு, ஜாதவ்பூர், ஹவுரா, டம்டம், டயமன்ட் ஹார்பர், உலுபேரியா ஆகிய இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றும்.

 நக்சலைட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் 4 இடங்களை வெல்லவும் வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் தெற்கு மாவட்டப் பகுதியில் மம்தாவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால், அந்த மண்டலத்தி் பெரும்பாலான தொகுதிகளை வெல்லக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

4 மடங்கு இடம்

பாஜவைப் பொறுத்தவரை கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 2 இடங்களைப் பெற்று 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் பாஜகவின் செயல்பாடு, பிரச்சாரம், போராட்டம், பேரணி ஆகியவற்றால், இந்த முறை கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இதனால், கடந்த 2014-ம் ஆண்டைக்காட்டிலும், 4 மடங்கு இடங்களில் பாஜக வெல்லுக்கூடும், 26 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

மேற்குவங்கத்தின் வடபகுதி, நார்த் 24 பர்கானாக்கள், எல்லைஓரப் பகுதிகளில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்து  இந்த முறை 8 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அலிபுர்துவர், ரெய்காஞ்ச், டார்ஜ்லிங், பலூர்காட், கிருஷ்ணாநகர், போன்கான், அசான்சோல், பாரக்பூர் ஆகிய இடங்களில் பாஜக வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இடதுசாரிகள் நிலை  மோசம்

கடந்த முறை சிபிஎம் கட்சி 2இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களையும் பெற்றது. ஆனால், இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது. தெற்கு மால்டா, ஜாங்கிபூர், பஹராம்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x