Last Updated : 17 Mar, 2019 07:39 PM

 

Published : 17 Mar 2019 07:39 PM
Last Updated : 17 Mar 2019 07:39 PM

தர்மேந்திரா பிரச்சாரம் செய்வதாக இருந்தால் ஹேமமாலினிக்கு சீட்: (ஜாட்)சாதிய நோக்கில் காய்நகர்த்தும் பாஜக

ஃபதேபூர் சிக்ரி தொகுதி ஜாட் மக்களின் கோட்டையாக இருப்பதால் அங்கு ஹேமமாலினியை களம்இறக்கி தர்மேந்திராவை பிரச்சாரம் செய்யஅழைப்பு விடுத்துள்ளதன் மூலம் சாதி அரசியலுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்துள்ளது.

தென்னிந்தியாவில் மட்டுமல்ல; வட இந்தியாவிலும் தேர்தலில் சாதிக்கு முக்கியத்துவம் தந்து தேர்தலை சந்திப்பதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற முறை மதுரா தொகுதியில் தேர்தலைச் சந்தித்த நடிகை ஹேமமாலினி அங்கிருந்து வேறு தொகுதிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்தமுறை மதுரா அருகிலேயே உள்ள ஜாட் இன மக்களின் கோட்டையாகத் திகழும் ஃபதேபூர் சிக்ரி தொகுதிக்கு ஹேமமாலினி நிறுத்தப்பட பாஜக திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தொகுதியில் ஹேமமாலினியின் கணவர் நடிகர் தர்மேந்திராவை பிரச்சாரம் செய்ய அழைப்புவிடுத்துள்ளது. ஏனெனில் அவரும் ஜாட் இனத்தைச் சார்ந்தவராம்.

ஜாட் மக்களின் பெரும்பான்மையான நம்பிக்கையை பெற ஹேமமாலினிக்கு இடமாற்றம் அளித்து வாக்குகளை சேகரிக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது.

ஆனால் ஹேமமாலினி இந்நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

''மதுரா என்பதால்தான் சென்ற முறை தேர்தலில் நிற்க சம்மதித்தேன். அதுமட்டுமின்றி தற்போது அந்த புனித பூமியோடு என் மனம் ஐக்கியமாகிவிட்டது. அங்குள்ள கிருஷ்ணா, ராதா ஆகிய தெய்வங்களே எனக்கு உத்வேகம்'' என்று பலமுறை அவர் தெளிவுபடுத்தி உள்ளாராம்.

அதுமட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும் மதுராவில் ஹேமமாலினி தொடங்கிவைத்த, நிறைவேற்றிய பல்வேறு மெகா திட்டங்களின் பணிகள் தற்போதும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவர் இடமாற்றம் செய்யப்பட்டால் இவை யாவும் புறக்கணிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

சமாஜ்வாதி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி-ராஷ்டிரிய லோக் தளம் சேர்ந்துள்ள கூட்டணியில் மதுரா தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளத்திற்கு செல்லும் என்று கூறுகிறார்கள். இங்கு சென்ற முறை ஹேமமாலினியிடம் தோற்ற ஜெயந்த் சவுத்திரி மீண்டும் களம் இறங்க வாய்ப்புள்ளதாம். தவிர, இத்தொகுதியில் நிறுத்த மூத்த பத்திரிகையாளர் வினித் நாராயணன் பெயரும் அடிபடுகிறது என்கிறாரகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x