Published : 01 Sep 2014 10:08 AM
Last Updated : 01 Sep 2014 10:08 AM

வி.வி.ஐ.பி.களின் பாதுகாப்புக்கு குண்டு துளைக்காத கார்கள்: மத்திய ரிசர்வ் போலீஸ் முடிவு

பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் வி.வி.ஐ.பி.களின் (மிக மிக முக்கிய நபர்கள்) எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இவர்களுக்கு குண்டு துளைக்காத கார்களை பயன்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சி.ஆர்.பி.எப். வட்டாரங்கள் கூறும்போது, “சுமார் ஒரு டஜன் குண்டு துளைக்காத கார்கள் விரைவில் வாங்கப்படும்; இவற்றை சாலைப் பயணத்தின்போது வி.வி.ஐ.பி.களின் பாதுகாப்புக்கு குறிப்பாக டெல்லிக்கு வெளியில் பயன்படுத் தப்படும்” என்றும் தெரிவித்தன.

வி.வி.ஐ.பி.களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்த பிறகு சி.ஆர்.பி.எப். இம்முடிவு எடுத்துள்ளது. இத்துடன் வி.வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவை பலப்படுத்தும் வகையில் சுமார் 1000 வீரர்கள் கொண்ட மேலும் ஒரு பட்டாலியனை சி.ஆர்.பி.எப். உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வி.வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு வீரர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு அண்மையில் சி.ஆர்.பி.எப். வசம் ஒப்படைக்கப்பட்டது. இவர் தவிர பாஜக தலைவர்கள் ஷாநவாஸ் உசேன், ராஜீவ் பிரதாப் ரூடி, காங்கிரஸ் தலைவர்கள் சச்சின் பைலட், வி.நாராயணசாமி ஆகியோ ருக்கும் அண்மையில் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டது.

முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ சங்கீத் சோமுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சி.ஆர்.பி.எப். கடந்த வாரம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சி.ஆர்.பி.எப். தற்போது 42 வி.வி.ஐ.பி.களின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளது. இத்தலைவர்கள் பாதுகாப்புடன் விரைவாகவும் பயணம் செய்யும் வகையில் இந்த கார்கள் வாங்கப்பட உள்ளன.

நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த கார்கள் நிறுத்தப்பட்டு, விவிஐபிக்களின் பயணங்க ளின்போது பயன்படுத்தப்படும். வி.வி.ஐ.பி.களுக்கு மட்டுமன்றி இந்த கார்களை, ஜம்மு காஷ்மீரிலும், நக்ஸல் தாக்குதல் அபாயம் உள்ள மாநிலங்களிலும் தனது சொந்த பயன்பாட்டுக்கு சி.ஆர்.பி.எப். பயன்படுத்தும்.

வி.வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவில் உள்ள தமது வீரர்களுக்கு, என்.எஸ்.ஜி. (கறுப்பு பூனைப் படை) போன்ற சிறப்பு படைகள் மூலம் நவீன பயிற்சி அளிக்கவும் சி.ஆர்.பி.எப். திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x