Last Updated : 31 Mar, 2019 03:32 PM

 

Published : 31 Mar 2019 03:32 PM
Last Updated : 31 Mar 2019 03:32 PM

1977-ல் இருந்த ஜனதா கட்சியைப் போல் பிடிவாதமாக காங்கிரஸ் இருக்கிறது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

1977-ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயன் தலைமையிலான ஜனதா கட்சி இருந்த பிடிவாதத்தைப் போல், இப்போது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. எந்த விஷயத்துக்கும் வளைந்து கொடுத்து ஒத்துழைத்து செல்ல மறுக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.

கடந்த 1977-ம் ஆண்டு இந்திரா காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி முயற்சித்தபோது, அதற்கு ஜனதா கட்சி ஒத்துழைக்க மறுத்து, பிடிவாதமாக சில விஷயங்களில் இருந்தlதால் கூட்டணி ஏற்படவில்லை. இதைக் குறிப்பிட்டு யெச்சூரி பேசினார்.

மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு இடையே பேச்சு நடந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே சமூகமாக பேச்சு நடந்த நிலையில், தங்களை கலந்தாய்வு செய்யாமல் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இதனால் இருதரப்புக்கும் இடையே நடந்த கூட்டணிப் பேச்சு முறிந்து, மக்களவைத் தேர்தலில்  இருகட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 1977-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஜனதா கட்சியுடன் கூட்டணிப் பேச்சு முறிந்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே சாதகமாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மாற்றுசக்தியாக நாங்கள் உருவானோம். ஆதலால், இந்த முறையும் எங்கள் கட்சிக்கு அதுபோல முன்னுரிமை இருக்கிறது, நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, பரஸ்பர அடிப்படையில் நாங்கள் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி துரதிர்ஷ்டவசமாக விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் போட்டியிடும் இடங்களில் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

ஆனால், காங்கிரஸ் கட்சிதான் வாக்குறுதியை மீறுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜகவையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், நிலையான சக்தியால் தான் எதிர்க்க முடியும் என்கிற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் எங்களின் பேச்சு தோல்வி அடைய காங்கிரஸின் பிடிவாதபோக்குதான் காரணம். கடந்த 1977-ம் ஆண்டு தேர்தலில் ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கு பேசினோம். மூன்றில் இரு பங்கு இடங்களை அதாவது 52 சதவீத இடங்களை ஜனதா கட்சிக்கு வழங்க நாங்கள் சம்மதித்தோம்.

ஆனால், மாநிலத்தில் ஜனதா கட்சியுடன் என்ன நடந்தது என்றால், அவர்கள் தங்கள் கோரிக்கையில் இருந்து சிறிதளவு நகர்ந்து கொடுக்க தயாராக இல்லை. அதன்பின் மேற்கு வங்க மக்களிடம் சென்ற ஜோதிபாசு, நாங்கள் ஜனதா கட்சிக்கு பெரும்பான்மையான இடங்களை விட்டுக்கொடுத்தோம், அவர்கள் வேண்டாம் என்றுகூறிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

அதன்பின் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனிப்பெரும் கட்சியாக மார்க்சிஸ்ட் உருவானது, தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றோம்.

மேற்கு வங்கத்தில் பேச்சுவார்த்தைக்கு எந்தவிதமான சூழலும் இல்லை, காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்போது, அது இடதுசாரி முன்னணிக்குதான் நல்ல வாய்ப்புகளை உருவாக்கும்.

நாங்கள் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுத்து, 48 மணிநேரம் அவர்களின் பதிலுக்காக காத்திருந்தோம். நாங்கள் முதலில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி, நாங்கள் கேட்டிருந்த தொகுதியில் சில வேட்பாளர்களை அறிவித்ததால், நாங்கள் அறிவித்தோம். கூட்டணிப் பேச்சை யார் முறித்தது என்று இப்போது தெரிந்திருக்கும்.

தொகுதிப் பங்கீடு பேச்சு குறித்து எந்தவிதமான முயற்சியையும் காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. நாங்கள் பாஜகவுக்கு எதிராக வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதன்மையானது என்ற எங்களுடையதை தெரிவித்துவிட்டோம். ஆனால், காங்கிரஸ் கட்சிதான் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு யெச்சூரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x