"நிறுத்துங்கள் மோடி; மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல": பிரியங்கா காந்தி ஆவேசம்

"நிறுத்துங்கள் மோடி; மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல": பிரியங்கா காந்தி ஆவேசம்
Updated on
1 min read

மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைப்பதை மோடி முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று பிரியங்கா காந்தி ஆவேசமாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளாராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தலுக்கு உத்தரப் பிரதேச கிழக்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக உ.பி.கிழக்கு மண்டலத்தில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கங்கை நதிக்கரை ஓரத்தில் வாழ்ந்து வரும் மக்களை, ஆற்றில் படகு மூலம் சென்று சந்தித்தும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும் பிரியங்கா தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், "2014-ம் ஆண்டு தேசத்தின் மக்கள், வாரிசு ஆட்சிக்குப் பதிலாக, நேர்மைக்கு வாக்களித்தனர். எப்போதெல்லாம் வாரிசு ஆட்சி அதிகாரம் பெறுகிறதோ, அப்போது, ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாகின்றன. குடும்பமே பிரதானம் என்ற அடிப்படைக்குப் பதிலாக இந்தியா பிரதானம் என்ற கொள்கையோடு அரசு பணியாற்றுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.  

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம், பத்திரிகை, அரசமைப்பு, நீதிமன்றம், அரசு அமைப்புகள், ராணுவம் அனைத்தையும் இழிவுபடுத்துகின்றன என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

பிரதமர் மோடி கூறிய இந்தக் கருத்து குறித்து மிர்சாபூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மோடியை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:

"பாஜக கடந்த 5 ஆண்டுகளாகத் திட்டமிட்டு பத்திரிகை உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகள் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

மக்கள் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை பிரதமர் மோடி முதலில் நிறுத்திக்கொள்ளட்டும். தேசத்தில் நடக்கும் அனைத்தையும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எதற்கும் அச்சப்படப் போவதில்லை.

ஏதாவது நடந்தால் கூட நாங்கள் துன்புறுத்தப்படுவோம். அதற்காக நான் அச்சப்படமாட்டேன். பாஜகவினருக்கு எதிராகத் தொடர்ந்து நாம் போராடுவோம். எங்களை அவர்கள் அதிகமாக துன்பப்படுத்தினால், நாங்கள் இன்னும் ஆவேசமாக எழுந்து வருவோம்.

அதிகாரம் தலைக்கு ஏறும்போது, இரு தவறான நோக்கங்கள் எழுகின்றன. ஒன்று மக்களை எளிதாக தவறான பாதைக்குத் திருப்பி விடலாம். இரண்டாவது தனக்கு எதிராக பேசுபவர்களை அச்சுறுத்துவது. நாங்கள் அச்சப்படப் போவதில்லை. அவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எங்களை துன்பப்படுத்தினால், எங்கள் போராட்டம் வீரியமாகும்''.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in