Last Updated : 06 Mar, 2019 04:32 PM

 

Published : 06 Mar 2019 04:32 PM
Last Updated : 06 Mar 2019 04:32 PM

புல்வாமா தாக்குதலை விபத்து என விமர்சித்த உ.பி. அமைச்சர்: வீடியோவை ரீட்வீட் செய்த திக்விஜய் சிங்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை ஓர் விபத்து என விமர்சித்து உ.பி. அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 21-ம் தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், "நமது பாதுகாப்பு ஏற்பாட்டில் எவ்வித குறைபாடும் இல்லை. அன்று நடந்தது ஓர் விபத்து" என அமைச்சர் இந்தியில் பேசியிருப்பது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ரீட்வீட் செய்துள்ளார்.

நேற்றுமுன் தினம், புல்வாமா தாக்குதலை விபத்து என திக்விஜய் சிங் விமர்சிக்க அதற்கு பாஜகவும் பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததே அவர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்ய காரணம்.

அவர் தனது ட்விட்டரில், புல்வாமா விபத்து குறித்தும் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்தும் வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. இதனால், அரசாங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நமது தேசத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிதான் நமது வீரர்களின் திறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

ம.பி.யைச் சேர்ந்த எம்.பி ஒருவர் புல்வாமா தாக்குதலை விபத்து என குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் அவர்களது மனநிலை. இதேநபர்தான் நவம்பர் 26-ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்றவர்" என தாக்கிப் பேசியிருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா புல்வாமா தாக்குதலை விபத்து என விமர்சித்துப் பேசிய வீடியோவை ரீட்வீட் செய்துள்ள திக்விஜய் சிங், "மவுரியாஜி குறித்து மோடிஜியும் அவரது அமைச்சர்களும் ஏதாவது சொல்ல விரும்புவார்களா?" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

திக்விஜய் சிங் ரீட்வீட் செய்ததையடுத்து உ.பி. துணை முதல்வர் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x