

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று பதவி விலகியுள்ளார். அவரும் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தவல்சிங் ஜடேஜா பாஜகவுக்கு அணி மாறினார்.
தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் குஜராத்தின் மானாவ்தர் தொகுதி எம்எல்ஏ ஜவஹர் சாவ்டா சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
ஜவஹர் சாவ்டா குஜராத் அமைச்சரவையில் நேற்று கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 8ம்- தேதி புருஷோத்தம் சவாரியா விலகினார். அவர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிலையில், ஜம்நகர் புறநகர் பகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்த காங்கிரஸ் பிரமுகர் வல்லப் தராவியா என்பவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம் சமர்ப்பித்தார். கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியுள்ளனர்.