Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்

இருவேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 மாணவர்கள் இறந்தனர். மேலும் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமம் விநாயகர் காலனியைச் சேர்ந்த சிறுவர்கள் 7 பேர், அப்பகுதியில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால், அக்குளத்தில் சுமார் 6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. குளத்தின் அடிப்பகுதியில் சேறும், சகதியுமாக இருந்ததால் குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய சிறுவர்கள் அடுத்தடுத்து மூழ்கத் தொடங்கினர்.

சிறுவர்களின் அலறல் கேட்டு அருகே பட்டாசு தொழிற்சாலையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து பார்த்தபோது, நீரில் மூழ்கி சிறுவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிலர் துணிச்சலாக குளத்துக்குள் குதித்து சிறுவர்களை மீட்க முயன்றனர். இதில் 3 சிறுவர்கள் மட்டுமே மீட்கப்பட்டனர். மற்ற 4 பேரும் நீரில் மூழ்கினர்.

முத்து என்பவரின் மகன் அருண்பாண்டியன் (10), ரமேஷ் என்பவரின் மகன் ராஜபாண்டி (12), முருகன் என்பவரது மகன் சண்முகம் (16), ராஜகோபால் என்பவரது மகன் பிரகாஷ் (15) ஆகிய 4 சிறுவர்களின் சடலங்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டன. இவர்கள் 4 பேரும் பள்ளி மாணவர்கள்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து, வேறு யாரும் குளத்தில் மூழ்கி உள்ளனரா எனத் தேடினர். மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி ஆகியோர் நேரில் வந்து சிறுவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சிலை கரைப்பின்போது பரிதாபம்

மற்றொரு சம்பவத்தில் சேலம் மாவட்டம், ஓமலூர் ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் விக்னேஷ் (17), அதேபகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் கிருஷ்ணபிரசாத் (17) ஆகிய இருவரும் விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஓமலூர் அருகே உள்ள மல்லக்கவுண்டனூர் ஏரிக்கு சென்றுள்ளனர்.

சிலையை கரைக்க இருவரும் ஏரியினுள் இறங்கினர். ஏரியின் ஆழமான பகுதியில் சென்றபோது இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். உடன் சென்றவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றும் பலனில்லை.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த கிருஷ்ணபிரசாத் சடலத்தை மீட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பின், விக்னேஷ் சடலமும் மீட்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.

மற்றொரு சம்பவத்தில் சேலம் ஜாகீர்அம்மாபளையத்தைச் சேர்ந்த கொத்தனாராக வேலை பார்த்துவந்த அண்ணாமலை (48) என்பவர் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியினருடன் சேர்ந்து விநாயகர் சிலையை கரைப்பதற்காக மேட்டூர் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். ஆற்றில் இறங்கியபோது அண்ணாமலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x