Last Updated : 04 Mar, 2019 09:07 AM

 

Published : 04 Mar 2019 09:07 AM
Last Updated : 04 Mar 2019 09:07 AM

குஜராத்தில் ஒரு தலைவரை மட்டும் முன்னிலைப்படுத்த விரும்பவில்லை- மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கருத்து

‘‘பாஜக.வை போல் ஒன்றிரண்டுதலைவர்களை கட்சியின் எதிர்காலமாக முன்னிலைப்படுத்துவதில் நம்பிக்கையில்லை’’ என்று குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் கூறியுள்ளார்.

குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஓரிரு தலைவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி, இவர்கள்தான் கட்சியின் எதிர்கால தலைவர்கள் என்று கூறுவதில் காங்கிரஸுக்கு நம்பிக்கையில்லை. பாஜக.வைப் போல் ஓரிரு தலைவர்களைக் கூறி அவர்கள் பின்னால் செல்வதில் காங்கிரஸுக்கு விருப்பமில்லை. கட்சியில் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கொள்கை.

குஜராத்தில் மக்களவை தேர்தலில் பாஜக.வை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை காங்கிரஸ் கொடுத்தது. அதேபோல் மக்களவை தேர்தலிலும் பாஜக.வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் காங்கிரஸ் கொடுக்கும்.

இவ்வாறு ராஜீவ் சதாவ் கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதியைக் கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 77 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், 15 இடங்கள் குறைவாக இருந்ததால், குஜராத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆளும் கட்சியாக இருந்த பாஜக பல தொகுதிகளை இழந்தாலும் ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை பெற்றது. அதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறுகையில் “இளம்தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார். பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா உட்பட பலருக்கு அவர் வாய்ப்புகள் வழங்கி உள்ளார். எனினும் தலைமை விஷயத்தில் அனுபவமுள்ள மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். பாஜக.வைப்பாருங்கள். அந்தக் கட்சி, 2 தலைவர்களின் கட்சி” என்றார்.

இவ்வாறு ராஜீவ் சதாவ் கூறினார்.

குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்திவரும் ஹர்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கோர் போன்ற இளம் தலைவர்கள் பிரபலமடைந்துள்ளனர். இவர்களில் அல்பேஷ் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். மேவானி சுயேச்சை எம்எல்ஏ.வாக இருக்கிறார். மக்களவை தேர்தலில் இவர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்குமா என்று செய்தியாளர் கேட்டதற்கு, ‘‘காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகிற எவரையும் வரவேற்க தயாராக இருக்கிறாம்’’ என்று ராஜீவ் சத்வா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x