அபிநந்தனை விடுவித்துத் தான் ஆகவேண்டும், பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை: வி.கே.சிங்

அபிநந்தனை விடுவித்துத் தான் ஆகவேண்டும், பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை: வி.கே.சிங்
Updated on
1 min read

பாகிஸ்தானிடம் சிக்கி விடுதலையாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா வசம் 9 மணியளவில் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அபிநந்தனை அமைதிக்கான செய்கையாக  விடுவிக்கிறோம் என்று அறிவித்ததையடுத்து இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்தும் இம்ரான் கானைப் பாராட்டியும் பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்து வந்தனர்.

இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானில் அவருக்கு ஏகோபித்த வரவேற்பு நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், பாகிஸ்தான் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை விடுவித்துத்தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்ததன் மூலம் நமக்கு ஏதோ பாகிஸ்தான் சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஜெனிவா உடன்படிக்கையின்படி,  சேவையில் இருக்கும் ராணுவ வீரர் பிடிபட்டால் அவரை உரிய நாட்டிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

1971-க்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த போர்க்கைதிகள் 90,000 வீரர்களை நாம் விடுவித்துள்ளோம் என்பதை நாம் மறக்கலாகாது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in