Last Updated : 18 Mar, 2019 11:29 AM

 

Published : 18 Mar 2019 11:29 AM
Last Updated : 18 Mar 2019 11:29 AM

சீட் தராமல் ஒதுக்கப்பட்ட கேரள எம்.பி. தாமஸுக்கு பாஜக வலை?- சமாதானப்படுத்த காங். முயற்சி

மக்களவைத் தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட 5 முறை எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸ் அதிருப்தியில் இருப்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

ஆனால், கே.வி.தாமஸை பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சிகள் மறைமுகமாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதை பாஜக மறுத்து வருகிறது. மாநிலத்தில் அரசியல் நிலையைக் கண்காணித்து வருகிறோம் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு 4 இடங்களையும் ஒதுக்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.

இதில் எர்ணாகுளம் தொகுதியில் இருந்து கடந்த 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஹிபி எடனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தச் செய்தி வந்ததில் இருந்து மூத்த தலைவர் கே.வி.தாமஸ் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். மாநிலத் தலைமை மற்றும் டெல்லி தலைமையையும் கடுமையாக தாமஸ் விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் கே.வி.தாமஸை பாஜக தங்களது கட்சிக்கு இழுத்து எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கான பேச்சுகள் மறைமுகமாக நடந்து வருவதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுகுறித்து மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையிடம் கேட்டபோது, "கே.வி.தாமஸுடன் நாங்கள் பேசி வருவது என்ற தகவல் ஆதாரமற்றது. தாமஸ் சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாநில அரசியலில் நடந்துவரும் பல்வேறு விஷயங்களையும் பாஜக தலைமை கூர்ந்து கவனித்து வருகிறது. வேறு ஏதும் கூற இயலாது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, டெல்லியில் உள்ள கே.வி.தாமஸ் இல்லத்துக்கு நேற்று சென்று அவரை சமாதானப்படுத்தினார். அவரின் சேவை காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் மிகவும் அவசியமானது என்று சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையை பாஜக பக்கம் தாமஸ் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கட்சி ரீதியாக அவருக்குப் பதவி வழங்கவும முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கவும், அந்தப் பதவியில் இருக்கும் பென்னி பெஹனனை, சாலக்குடி தொகுதியில் காமெடி நடிகர் இன்னோசென்டை எதிர்த்துப் போட்டியிடக் கூறவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர்த்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தாமஸுக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் தொலைபேசியில் கே.வி.தாமஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படமாட்டேன். மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக உழைப்பேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x